Published : 29 Nov 2019 12:59 PM
Last Updated : 29 Nov 2019 12:59 PM
மகாராஷ்டிராவில் பாஜகவிடம் இருந்து ஆட்சி பறிபோன நிலையில், விரைவில் கோவாவிலும் ஆட்சி பறிபோகும் அதிசயம் நிகழலாம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்
கோவா மாநிலத்தில் உள்ள கோவா பார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் இன்று காலை சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்தை மும்பையில் சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் நிருபர்களிடம் சர்தேசாய் கூறுகையில், " மாநிலத்தில் ஆட்சி மாற்றம் என்பது முன் அறிவிப்பு செய்துவிட்டு நடக்காது. மகாராஷ்டிராவில் நடந்தது போன்று திடீரென்று நடக்கும்.நாங்கள் பிராந்திய கட்சி. மகாராஷ்டிராவில் நடந்த மாற்றம் நாடுமுழுவதும் நடக்க வேண்டும் என்று எங்கள் கருத்து. நாங்கள் சிவசேனா, என்சிபி மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வலிமையான முன்னணியாக மாற்றியுள்ளோம். மகாராஷ்டிராவில் நடந்தது போன்று கோவாவிலும் நிகழ்த்த முயல்வோம்" எனத் தெரிவித்தார்
இந்த சந்திப்பு குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், " கோவா பார்வேர்டு கட்சி்யின் தலைவர் விஜய் சர்தேசாய் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் இன்று என்னைச் சந்தித்துப் பேசினார்கள். இவர்கள் 3 பேர் தவிர்த்துக் கூடுதலாக ஒரு எம்எல்ஏ என மொத்தம் 4 எம்எல்ஏக்கள் சிவசேனாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
மேலும், நான் கோவாவில் உள்ள மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் தவில்கருடன் பேசி இருக்கிறேன். கோவா அரசுக்கு ஆதரவு அளித்துவரும் சில எம்எல்ஏக்களும்எங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்
முதலில் கோவாவில் அமைந்துள்ள ஆட்சியே அறத்துக்கு மாறான ஆட்சி. பல்வேறு கட்சிகளுடன் இணைந்து தனியாக ஒருகூட்டணி அமைக்க அந்த மாநிலத்தில் திட்டமிட்டுள்ளோம் அதில் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம். மிகப்பெரிய அரசியல் கூட்டணி அங்கு அமையும்,விரைவில் மகாராஷ்டிராவைப் போன்று கோவாவிலும் அதிசயம் நிகழும்.
மகாராஷ்டிராவில் பாஜகவிடம் ஆட்சி பறிபோனதைப் போல், கோவாவிலும் பாஜவிடம் இருந்து விரைவில் ஆட்சி பறிபோகலாம்" எனத் தெரிவித்தார்
கோவா நிலவரம் என்ன?
கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.இதில் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவுக்கு 13 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை.
தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் தேர்தலுக்குப்பின் மாகாராஷ்டிராவாடி கோமந்தக்கட்சி, கோவா பார்வேர்டு கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். அங்கு முதல்வராக மறைந்த மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றார். ஆனால் அவரும் சில ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து, கோவா முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சவாந்த் பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்த 15 எம்எல்ஏக்களில் 10 பேர் பாஜகவில் கடந்த ஜூலை மாதம் இணைந்தனர். இதில் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரகாந்த் காவ்லேகர் தலைமையில் 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 ஆக இருக்கிறது. ஒருகாலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது அந்த கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் கோவா ஃபார்டு கட்சி, சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேர், என்சிபி மற்றும் எம்ஜிபி கட்சியில் இருந்து தலா ஒரு எம்எல்ஏ ஆகியவற்றுடன் சேர்த்து 27 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT