Published : 28 Nov 2019 01:22 PM
Last Updated : 28 Nov 2019 01:22 PM
மகாராஷ்டிராவில் உள்ள ஜனநாயகத்தின் சக்தியை, அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வெட்கமின்றி முயன்றார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றத்தின் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிர ஆளுநர் கோஷ்யாரி நடந்து கொண்டார். மிகவும் கண்டனத்துக்கு உரிய வகையில் அவரின் நடத்தை இருந்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பெயரில்தான் ஆளுநர் கோஷ்யாரி நடந்துகொண்டார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அதனால்தான் அவசர, அவசரமாக சனிக்கிழமை ஆளுநர் கோஷ்யாரி தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகவும், அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேர்தலுக்கு முன் பாஜக, சிவசேனா கூட்டணி நிலைக்கவில்லை. ஏனென்றால், பாஜகவின் அகந்தை, அதீதமான நம்பிக்கையும்தான் கூட்டணி உடையக் காரணம். சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய 3 கட்சிகளின் கூட்டணியை உடைக்கவும், அழிக்கவும் பாஜகவின் முயற்சிகள் வெளிப்படையாக இருந்தன. ஆனால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதும், பிரதமர் மோடி, அமித் ஷா அரசு முழுவதும் வெளிப்பட்டது. 3 கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து பாஜகவின் இழிவான சூழ்ச்சியை முறியடித்துள்ளன.
நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என வழி தெரியாமல் பிரதமர் மோடி, அமித் ஷா அரசு கையறுநிலையில் இருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. வளர்ச்சி சரிந்து வருகிறது, வேலையின்மை அதிகரித்து வருகிறது, முதலீடு வரவில்லை.
விவசாயிகள், வர்த்தகர்கள், சிறு, குறு, தொழில் செய்பவர்களின் வேதனை மோசமாகியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் மக்களின் நுகர்வு குறைந்து வருகிறது.
இதுபோன்ற பொருளாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வதற்கு என்பதற்குப் பதிலாக, புள்ளிவிவரங்களை மாற்றுவதிலும், அதை மக்கள் அறியவிடாமல் வெளியிடவிடாமல் செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையான, சார்பான சில தொழிலதிபர்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் என்னாவது? வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள லட்சக்கணக்கான சாமானிய, ஊதியம் பெறும் மக்கள் தங்களின் பணம் குறித்துக் கவலை கொள்கின்றனர்.
பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிடாமல் இருந்தமைக்கு காங்கிரஸ் கட்சியின் வலியுறுத்தல் முக்கியக் காரணம்
நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்புச் சட்ட நாளை மோடி, அமித் ஷா கொண்டாடியது உண்மையான போலித்தனம். தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் செய்யப்பட்ட திருத்தத்தால் வடகிழக்கு மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்புக்கு ஆளானது.
உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தேசிய குடியுரிமைத் திட்டம் அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆர்எஸ்எஸ் பாஜகவின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறாததால், புதிய என்ஆர்சியைக் கொண்டுவர அசாமில் முயல்கிறது
3 மாதங்களுக்கு முன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய தொடக்கம் ஏற்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து அங்கு நடைமுறையில் இருந்த 370-வது பிரிவை நீக்கி ஜனநாயகத்தைக் குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள கள நிலவரம் மோடி, அமித் ஷா அரசு வெளிக்காட்டும் தோற்றத்தைக்க காட்டிலும் முற்றிலும் வேறுபாடானது,
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காஷ்மீருக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், போலியான என்ஜிஓ மூலம் ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி.க்களை வரவழைத்து ஜம்மு காஷ்மீரைக் காண்பித்து நற்சான்று பெற்றுள்ளது மத்திய அரசு''.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT