Published : 26 Nov 2019 05:04 PM
Last Updated : 26 Nov 2019 05:04 PM
எதையும் நாம் அனுபவிக்கும்போதுதான் உண்மையான மதிப்பை அறிய முடியும். மகாராஷ்டிராவில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம், அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு உறுதியில்லை என்று பிரதமர் மோடியை மறைமுகமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடினார்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட 70-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம், அதில் மத்திய அரசின் தலையீடு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தன. நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறிது நேரம் கூடினர்.
மகாராஷ்டிராவில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பட்னாவி்ஸ் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், "மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாம் மதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தைப் புகழ்ந்து பிரதமர் மோடி பேசி வருவது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு மன்மோகன் சிங் கூறுகையில், "எந்த விஷயத்தையும் நாம் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொள்ள முடியாது. அதை நாம் அனுபவிக்கும்போதுதான் உண்மையான மதிப்பை அறிய முடியும். மகாராஷ்டிராவில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது, இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கைகளில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் பாதுகாப்பானதாக இருக்கும் என உறுதியில்லை" என விமர்சித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT