Published : 26 Nov 2019 11:12 AM
Last Updated : 26 Nov 2019 11:12 AM
உலகிலேயே மூன்றாவது அதிக எடை கொண்ட சிறுநீரகத்தை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள்.
சராசியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 120 முதல் 150 கிராம் எடையளவில் இருக்கும். ஆனால் டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் உடலில் இருந்து அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் 7.4 கிலோ எடை கொண்டதாகவும் 32 செ.மீ நீளம், 21.8 செ.மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது.
இது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான, சச்சின் கதுாரியா, "எங்கள் மருத்துவமனைக்கு தீராத அடி வயிற்று வலியுடன் 56 வயது ஆண் ஒருவர் வந்தார். அவருக்கு நாங்கள் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தினோம்.
அப்போது அவருக்கு ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டீஸீஸ் (ADPKD- AutoSomal Dominant Polycystic Kidney Disease) என்ற மரபணு குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தோம்.
இது பரம்பரை மரபணு குறைபாடு. 1000-ல் ஒருவருக்கு இக்குறைபாடு ஏற்பட சாத்தியம் இருக்கிறது.
இந்த குறைபாடு நாளடைவில் நோயாளிகளின் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யும். இந்த குறிப்பிட்ட நபர் எங்களின் மருத்துவமனைக்கு வரும்போது கடுமையான வலியுடனேயே வந்தார். அவரது இடது சிறுநீரகம் நீர்க்கட்டிகள், தொற்றுகளால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஸ்கேன் செய்து பார்த்த போது கிட்னி சராசரி அளவைவிட பெரிதாக இருப்பது தெரிந்தது.
ஆனால், அதனை அறுவை சிகிச்சையில் அகற்றியபோதே அதன் எடை புதிதாகப் பிறந்த 2 குழந்தைகளைவிட மிக மிக அதிகமாக இருந்தது தெரியவந்தது. மொத்த எடை 7 கிலோ. அதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் தேறி வருகிறார்.
அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த முடிவு செய்துள்ளோம். இப்போதைக்கு அவர் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்" என்றார்.
இதற்கு முன்னதாக அமெரிக்காவில் 9 கிலோ எடையில் ஒரு சிறுநீரகமும், நெதர்லாந்து நாட்டில் 8.7 கிலோ எடையில் ஒரு சிறுநீரகமும் அப்புறப்படுத்தப்பட்டது. இவையே அதிக எடை கொண்ட சிறுநீரகங்கள் என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அந்த வரிசையில் மூன்றாவதாக தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகத்தை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT