Published : 25 Nov 2019 05:14 PM
Last Updated : 25 Nov 2019 05:14 PM
காஷ்மீரில் மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக தேச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சார் நகரின் ஒரு பகுதி மிகப்பெரிய கலவரங்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டது. இதில் தொடர்புடைய முக்கிய காரணகர்த்தா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
''காஷ்மீரில் மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக தேச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் பஷீர் அகமது குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீடு வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த டங்தார் பகுதியில் உள்ளது. எனினும் பாகி-மெஹ்தாப் பகுதியில் தங்கியிருந்தார். நகரத்தின் சன்போரா பகுதிக்கு வந்தபோது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரின் பதிவுகளின்படி, ஸ்ரீநகர் நகரில், குறிப்பாக சராராவின் அஞ்சார் பகுதியில் தேச விரோதப் போராட்டங்களை ஏற்பாடு செய்து வன்முறையில் குரேஷி ஈடுபட்டுள்ளார். அவர் பல வழக்குகளில் தொடர்புடையவர்.
முதற்கட்ட விசாரணையின்போது, பிரிவினைவாதிகளுடனான அவரது தொடர்புகள் குறித்து அதிகாரிகள் அறிந்து கொண்டனர். தேசிய விரோதப் போராட்டங்களை நடத்தவும், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசவும் இளைஞர்களைத் தூண்டுவதில் பஷீர் அகமது குரேஷி முக்கியப் பங்கு வகித்தது குறித்து காவல்துறையில் நிறைய பதிவுகள் உள்ளன.
சட்டவிரோதக் கூட்டங்கள் நடத்தி வன்முறை ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இதனால் பொது சொத்துகள் நாசம் மற்றும் பொதுமக்களுக்குக் காயங்கள் ஏற்பட வழிவகுத்தன.
இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணை நடந்து வருகிறது''.
இவ்வாறு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT