Last Updated : 24 Nov, 2019 03:35 PM

 

Published : 24 Nov 2019 03:35 PM
Last Updated : 24 Nov 2019 03:35 PM

என்சிபி சட்டப்பேரவை குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவாரை நீக்கியது செல்லாது: பாஜக குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர் ஆஷிஸ்ஷெல்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவாரை அந்தக் கட்சியின் தலைமை நீக்கியது செல்லாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

பாஜக தலைமையில் முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்க, என்சி தலைவர் அஜித் பவார் ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த என்சிபி கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை பறித்தது அந்த கட்சி மேலும், கொறடா அதிகாரத்தையும் ரத்து செய்தது.

என்சிபி கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தற்காலிகமாக ஜெயந்த் பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்சிபி கட்சியின் இந்த முடிவு அரசியலமைப்பு ரீதியாகச் செல்லாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா பாஜகவின் மூத்த தலைவர் ஆஷிஸ் ஷெல்லர் மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், " என்சிபி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அஜித் பவார்தான் இருக்க முடியும். அவரை நீக்கி பிறப்பித்த அந்த கட்சியின் தலைமை உத்தரவு செல்லாது. ஏனென்றால், சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருவரைத் தேர்வு செய்யும் போது அனைத்து எம்எல்ஏக்களும் இருக்கும்போதுதான் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, நீக்கும்போது அனைத்து எம்எல்ஏக்களும் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவசியமாகும்.

அவ்வாறு இல்லாமல் என்சிபி கட்சி தன்னிச்சையாக அஜித் பவாரை நீக்கியுள்ளது. அஜித் பவார் தன்னைத்தான் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்துள்ளதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளார். இப்போது ஜெயந்த் பாட்டீலை நியமித்தால் செல்லாது.

அக்டோபர் 30-ம் தேதி அஜித் பவாரை சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்தது உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள வழக்கும், உத்தரவும் கட்டுப்படுத்தாது. புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருவரை என்சிபி தேர்வு செய்துள்ள நிலையில் அதை ஆளுநர் ஆய்வு செய்வது அவசியமாகும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x