Published : 23 Nov 2019 07:33 PM
Last Updated : 23 Nov 2019 07:33 PM
30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நட்பை முறித்துவிட்டார்கள். எதிராக இருந்தவர்களுடன் கூட்டணி அமைத்து ஜனநாயகத்தைக் கொலை செய்துவிட்டார்கள் என்று சிவசேனா மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.
3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.
பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு. என்சிபி ஆதரவு அளிக்கவில்லை. அஜித் பவார் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கம் அளித்தார்.
சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், "மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக இழுக்க நினைத்தால் மகாராஷ்டிராவில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது" என்று எச்சரித்தார். மேலும், பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
''பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸும் என்சிபி தலைவர் அஜித் பவாரும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்த பின்தான், மகாராஷ்டிரா ஆளுநர் பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எந்தக் கட்சியையும் அழைத்து ஆளுநர் ஏதும் பேசவில்லை.
பாஜக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. ஆனால், அதற்குரிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை இப்போது கூற இயலாது. அதற்குரிய இடம் சட்டப்பேரவைதான். அங்கு உரியவகையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும்.
ஜனநாயகத்தைக் கொலை செய்துவிட்டோம் என்று காங்கிரஸ் எங்களைக் குற்றம் சாட்டுகிறது. அப்படியென்றால், சிவசேனா தனது கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததை என்னவென்று சொல்வது? அது ஜனநாயகப் படுகொலை இல்லையா. இதுதான் ஜனநாயகத்துக்கு அளிக்கும் மரியாதையா? ஆனால், பாஜக நிலையான ஆட்சி வழங்க என்சிபி கட்சி எம்எல்ஏக்களை அழைத்தால் அவர்களுக்கு எதிரானதா?
மக்கள் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும்தான் ஆட்சி அமைக்க வாக்களித்துள்ளார்கள். நாங்கள் எதிர்க்கட்சியில்தான் இருப்போம் என்று காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் முன்பு கூறினார்கள். அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க வில்லையா?
அரசியலில் சூழலுக்கு ஏற்றார்போல் முடிவு எடுக்கப்படும். மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைவதற்காக அஜித் பவாருடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நட்பை, ஆட்சி அதிகாரத்துக்காக சிவசேனா முறித்துக்கொண்டது. அரசியலில் எதிராக இருப்பவர்களுடன் இந்துத்துவா, தேசியவாதம் ஆகிய கொள்கைகளைத் தியாகம் செய்து அவர்களுடன் கூட்டணி அமைத்து ஜனநாயகத்தைக் கொலை செய்துள்ளது.
சிவசேனா தலைவர்கள் சிலர் அவர்கள் நடத்தும் நாளேடு மூலம் பிரமதர் மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் கூட்டணியையும் தவறான வார்த்தைகளால் தூற்றினார்கள்.
தேர்தலில் பாஜக ,சிவசேனா கூட்டணி வென்று பெரும்பான்மை பெற்றது. தேர்தலில் வெற்று பெற்றதற்கு பட்னாவிஸின் பங்கு முக்கியமானது. அதற்கு சிவசேனா தொண்டர்கள் ஆதரவு அளித்தார்கள். பாஜக தேர்தலில் கடினமாக உழைத்து 70 சதவீதம் இடங்களைப் பெற்றுள்ளது.
தேர்தல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மக்கள் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் நிலையான, நேர்மையான ஆட்சியை மாநிலத்தில் வழங்குவார்''.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT