Last Updated : 23 Nov, 2019 06:55 PM

 

Published : 23 Nov 2019 06:55 PM
Last Updated : 23 Nov 2019 06:55 PM

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அனைத்தும் சாத்தியம்; நிலையான ஆட்சி தருவோம்: பட்னாவிஸ் உறுதி

மும்பையில் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை,

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அனைத்தும் சாத்தியம். மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை பாஜக அளித்து, விவசாயிகளுக்காக உழைக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.

மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அனைத்தும் சாத்தியம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் வலிமையான, நிலையான ஆட்சியைத் தருவோம். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உழைப்பதற்காக நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்த நேரத்தில் சில நண்பர்கள் எங்களுடன் இல்லை என்பது உண்மைதான்.

மீண்டும் என்னை முதல்வராக்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

அதன்பின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான முன்கந்திவார் நிருபர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். எங்களிடம் 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மாநிலத்தில் பாஜக நிலையான ஆட்சியை அளித்து, சிறப்பாகவே செயல்படும்.

என்சிபி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அஜித் பவார்தான் இருக்கிறார். ஆதலால் ஒவ்வொரு எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்று அர்த்தம். பாஜகவுக்கும் அதன் கூட்டணியும், ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்தனர். ஆனால், எங்களுடன் இருந்த கூட்டணி மக்களை அவமதித்துவிட்டது. அந்த மரியாதையை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளார்கள். ஆதலால்தான், நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம். 170எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

மாநிலத்தில் உள்ள விவசாயிகள், விளிம்புநிலையில் உள்ள மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர பாஜக அரசு தொடர்ந்து உழைக்கும். அடுத்த 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை அளித்து உற்சாகமாக உழைப்போம்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தலைமையில் மாநிலம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெறும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x