Published : 19 Nov 2019 12:07 PM
Last Updated : 19 Nov 2019 12:07 PM
காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம், ஜேஎன்யூ மாணவர்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடை பெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின்போது காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார சுணக்க நிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதிலைப் பெற எதிர்க்கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.
மக்களவையில் முதல் நாளான நேற்றே காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி பிரச்சினை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மக்களவையின் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் மக்களவையில் சற்று அமளி நீடித்தது.
இந்தநிலையில் மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பின. இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜேஎன்யூ மாணவர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அந்த பிரச்சினையை எழுப்பினர். அவையின் மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக இந்த இரு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
உறுப்பினர்களின் கோரிக்கையை உரிய முறையில் எழுப்ப வேண்டும், அதனை உரிய முறையில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும், அதுவரை அவை வழக்கமாக செயல்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்க வேண்டும் என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் தொடர்ந்து அமளி நீடித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT