Published : 18 Nov 2019 11:43 AM
Last Updated : 18 Nov 2019 11:43 AM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமிதரிசனம் செய்ய தடையில்லை என்று கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உண்மையில் தடை(de facto) இருக்கிறது என்று கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்தார்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதைத் எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் அதை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இதில் 3 நீதிபதிகள் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றவும், 2 நீதிபதிகள் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டு அறிவித்த தீர்ப்பை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பெண்களைச் சபரிமலைக்கு அனுமதித்தால் பல்வேறு பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கேரள அரசும், போலீஸாரும் எதிர்கொண்டார்கள். ஆதலால், இந்த ஆண்டு விளம்பர நோக்கில் பெண்கள் சபரிமலைக்கு வந்தால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாது என்று தேவஸம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்றே ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.
சபரிமலை தீர்ப்புக் குறித்தும், பெண்கள் அனுமதிக்கப்படலாமா என்பது குறித்தும் கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், " சபரிமலை வழக்கில், அரசியலமைப்புச் சட்டப்படி இயங்கும் ஒரு அரசு நீதிமன்ற உத்தரவுப்படிதான் செயல்பட முடியும். இப்போது எங்களுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. சபரிமலை வழக்கில் நவம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கடந்த 2018-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை இருக்கிறதா என்பதுதான் தற்போதுள்ள கேள்வியாகும்.
சட்டத்தின்படி(De jure) எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. ஆனால், உண்மை அடிப்படையில்(de facto) தடை இருக்கிறது. 2018-ம் ஆண்டு உத்தரவுக்குத் தடை இருக்கிறது என்றாலும் அது அதிகாரபூர்வமாக தீர்ப்பில் குறிப்பிடவில்லை" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT