Published : 18 Nov 2019 11:11 AM
Last Updated : 18 Nov 2019 11:11 AM
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 7-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதல்வர் பதவி வேண்டும் என்ற சிவசேனா கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது. இதனால் கூட்டணி முறிந்தது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் 7-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சிவாஜி பூங்காவில் உள்ள பால் தாக்கரே நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் அங்கிருந்து காரில் புறப்படத் தயாராகினர். அப்போது, அங்கு கூடிய சிவசேனா கட்சித் தொண்டர்கள், பட்னாவிஸுக்கு எதிராக முழக்கமிட்டனர். குறிப்பாக, ‘சத்ரபதி சிவாஜி மகராஜுக்கு ஜே’ என்ற சிவசேனாவின் பாரம்பரிய முழக்கத்தை எழுப்பினர். ஆனால் இவற்றுக்கு எவ்வித பதிலும் தராமல் பட்னாவிஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT