Last Updated : 18 Nov, 2019 10:05 AM

 

Published : 18 Nov 2019 10:05 AM
Last Updated : 18 Nov 2019 10:05 AM

ராம்தாஸ் அத்வாலே அமித் ஷா பேச்சு: சிவசேனா, காங். என்சிபி கூட்டணியில் பிளவு வருமா?

மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே : கோப்புப்படம்

புதுடெல்லி

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் அமித் ஷா பேசிய பேச்சால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து உருவாக்க உள்ள கூட்டணியில் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை.

இதையடுத்து, சிவசேனாக் கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சிவசேனா வெளியேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், அந்த கட்சியின் சார்பில் மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான விரிசல் அதிகமானது.

இந்த சூழலில் மகாராஷ்டிரா அரசியல் குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடந்த வாரம் மவுனம் கலைத்தார். அப்போது, அவர் பேசுகையில், " தேர்தலுக்கு முன், பிரதமர் மோடியும், நானும் பலமுறை தேர்தல் பிரச்சாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்று பேசினோம். யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது புதிய கோரிக்கைகளுடன் வருகிறார்கள், இதை ஏற்க முடியாது.

அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையை வெளிப்படையாகப் பேசுவது என்பது கட்சியின் வழக்கம், பாரம்பரியம் அல்ல. போராட்டம் செய்து மக்களின் அனுதாபத்தைப் பெற முடியும் என சிவசேனா நினைத்தால், மக்களைப் பற்றி உன்மையாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்" எனத் தெரிவித்தார்

இதற்கிடையே நேற்று சிவசேனா நிறுவனர் பால் தாக்ரேயின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட மாநில பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்று அஞ்சலிசெலுத்தினார்கள்.
அதேசமயம், டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டது. மேலும்,நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையில் சிவசேனாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயிடம் மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணி அமையுமா என்று நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், " பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் நான் சமீபத்தில் பேசினேன். சிவசேனா-பாஜக இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் நீங்கள் தலையிட்டால் தீர்வு வந்துவிடுமே என்று கூறினேன். அதற்கு அமித் ஷா என்னிடம், கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக நடக்கும்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக மீண்டும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்கும் என உறுதியளித்தார்" எனத் தெரிவித்தார்
தற்போது ராம்தாஸ் அத்வாலேயின் பேச்சு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே உருவாக உள்ள கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதற்குக் காங்கிரஸ், என்சிபி கட்சி இறுதியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை சோனியாவும், சரத்பவாரும் சந்தித்து இறுதி முடிவை எடுக்க உள்ளார்கள். இந்த சூழலில் ராம்தாஸ் அத்வாலேயின் பேச்சு சிவசேனாவுடன் இணையும் கூட்டணியில் ஏதேனும் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x