Published : 15 Nov 2019 03:20 PM
Last Updated : 15 Nov 2019 03:20 PM
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. மிக முக்கிய வழக்கு என்பதாலும், இதில் சிதம்பரத்தின் பங்கு முக்கியமானது என்பதாலும் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் கடந்த புதன்கிழமை அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது அமலாக்கப் பிரிவு, சிதம்பரம் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் இன்று தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
‘‘இந்த வழக்கில் சிதம்பரத்தின் பங்கு முக்கியமானது என்பதால் ஜாமீன் வழங்க முடியாது. அவ்வாறு ஜாமீன் வழங்குவது சமூகத்திற்கு தவறான தகவலை அளித்து விடும். சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் சிதம்பரத்துக்கு எதிரான வலிமையான ஆதாரங்கள் உள்ளன.
இந்த முறைகேடில் அவர் முக்கிய பங்காற்றியதற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க முடியாது’’ என நீதிபதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT