Published : 14 Nov 2019 04:09 PM
Last Updated : 14 Nov 2019 04:09 PM
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா தேர்தல் முடிவுகளில் அதிக வாக்குகள் கிடைத்ததால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினர் சரியாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கட்சியின் உயர்மட்ட அளவிலான பேச்சாளர்கள் பற்றாக்குறை என்றும் காரணம் கூறப்பட்டது.
ஹரியாணாவில் ராகுல் காந்தி இரண்டு முறை பிரச்சாரம் செய்தார். மகாராஷ்டிராவில் அவர் ஐந்து பிரச்சாரப் பேரணிகளில் உரையாற்றினார். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இரு மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யவில்லை. எனினும் இரு மாநிலத் தேர்தல் முடிவுகளிலும் காங்கிரஸ் கணிசமான வாக்குகளைப் பெற்று கட்சியினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் இறுதியில் தொடங்கி ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடுவதென காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் செல்கிறார்கள். இதில் பிரியங்கா காந்தியின் பெயர் மட்டும் விடுபட்டுள்ளது.
குலாம் நபி ஆசாத், ஆர்.பி.என். சிங், ஜிதின் பிரசாதா மற்றும் தாரிக் அன்வர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் முக்கிய பிரச்சாரகர்களாக இடம் பெற்றுள்ளனர்.
தேர்தலுக்குத் தயாராவதற்காக நாளை மறுதினம் (சனிக்கிழமை) காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் புதுடெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT