Published : 14 Nov 2019 02:02 PM
Last Updated : 14 Nov 2019 02:02 PM
மகாராஷ்டிராவில் சிவசேனாவும் பாஜகவும் ஆட்சி அதிகாரத்தை சம பங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தம் பிரதமர் மோடிக்குத் தெரியாதா? பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமருக்குத் தெரிவித்தாரா என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்ததையடுத்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, அவர் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று சிவசேனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதில் முதல்வர் பதவி கேட்டு சிவசேனா புதிய கோரிக்கைகள் வைக்கிறது. அதை ஏற்க முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சி சட்டவிதிகள்படியே வந்துள்ளது என்று தெரிவித்தார்.
சிகிச்சை முடிந்து இன்று தனது இல்லத்துக்குச் செல்லும் முன் நிருபர்களுக்கு சஞ்சய் ராவத் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று அளித்த பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ராவத் அளித்த பதிலில் கூறியதாவது:
''நாங்கள் போரிடுவதற்கும், சாவதற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால், அச்சுறுத்தலையும், நிர்பந்தப்படுத்தும் தந்திரங்களையும் பொறுத்துக்கொள்ளமாட்டோம்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே நடந்த உடன்பாடு தனிப்பட்ட முறையில் நடந்தது. தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்று பிரதமர் பலமுறை பொது மேடையில் பேசியதை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
அதுபோல சிவசேனாவும் இதேபோன்ற கருத்தைக் கூறியதும் நினைவிருக்கட்டும். ஆனால், அவ்வாறு உறுதியளிக்கவில்லை என்று பாஜக தொடர்ந்து கூறுவது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பொய்யர் என்று சித்தரிப்பது போன்று இருக்கிறது.
நான் கேட்கிறேன். உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து செய்து கொண்ட உடன்பாடான ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு அளிப்பது குறித்து, பிரதமர் மோடிக்கு அமித் ஷா தகவல் தெரிவித்தாரா? அவ்வாறு தெரிவித்திருந்தால், இந்த அளவுக்கு மாநிலத்தில் சூழல் மோசமடைந்திருக்காது.
தேர்தல் பொதுக்கூட்டங்களில் பலமுறை தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்று பிரதமர் மோடி பேசியதைக் கேட்டோம். ஆனால், நாங்களும் அவ்வாறு சிவசேனாவில் இருத்து அடுத்த முதல்வர் வருவார்கள் என்று தெரிவித்தோம். ஆனாவ், பாஜக பேசியது எங்களுக்கான அரசியல் செய்தியாக எடுக்கவில்லை.
பாஜக-சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தியபோது, பிரதமர் மோடியை ஒதுக்கிவைத்துதான் முடிவு எடுத்தார்களா என்பது வியப்பாக இருக்கிறது. புரிந்துணர்வில் சிக்கல் இருந்தால் மறுத்து இருக்கலாமே, தேர்தல் முடிவு வெளிவரும் வரை ஏன் அமித் ஷா மவுனமாக இருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாத்தோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேவை, அமித் ஷா சந்தித்தார். அப்போது, இருவரும் நாங்கள் கோயிலாகக் கருதும் பால்தாக்கரே வாழ்ந்த அறையில் சென்று இட ஒதுக்கீடு குறித்தும், அதிகாரத்தில் சம பங்கு பகிர்வது குறித்தும் பேசினார்கள்.
எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சிலர் பேசுவது எங்களின் கோயிலையும், பால் தாக்கரேவையும், மகாராஷ்டிராவையும் அவமானப்படுத்துவது போலாகும்.
மூடப்பட்ட அறைக்குள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால்தான் அது வெளியே வரும். நாங்கள் அரசியலில் ஒருபோதும் வியாபாரம் செய்தது இல்லை. அரசியலில் லாபம், நஷ்டம் என்ற அடிப்படையில் பார்த்தது இல்லை. சுயமரியாதை என்ற ஒருவிஷயத்துக்காக அனைத்தையும் வெளிப்படையாக வைக்கிறோம்’’.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT