Published : 18 Oct 2019 01:32 PM
Last Updated : 18 Oct 2019 01:32 PM
ஹைதராபாத்,
டீ, காபி குடித்துவிட்டு 'கப்'பைக் கீழே வீசுவதற்குப் பதிலாக இனிமேல் அந்த 'கப்'பை அப்படியே சாப்பிடும் வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இதற்கு 'ஈட் கப்' என்று ஹைதராபாத்தை சேர்ந்த ஜினோம்லேப் எனும் தனியார் நிறுவனம் பெயரிட்டுள்ளது.
முற்றிலும் தானியங்களால் உருவாக்கப்பட்ட இந்த 'ஈட் கப்'பில் சூடான பானங்கள், குளிர்ந்த பானங்கள் இரண்டையும் ஊற்றிப் பருகலாம். 40 நிமிடங்கள் வரை 'ஈட் கப்' நமத்துப்போகாமல் கப் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த 'ஈட் கப்'பில் சூப், காபி, தேநீர், யோகர்ட், சுடுநீர் உள்ளிட்ட பானங்களைப் பருகமுடியும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது தவிர்க்கப்பட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 'ஈட் கப்' கொண்டுவரப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் கூறுகையில், " ஈட் கப் முற்றிலும் தானியங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. நாம் ஊற்றிக்குடிக்கும் சூடான, குளிர்ந்த பானங்கள் 40 நிமிடங்கள்வரை கப்பில் வைத்திருக்க முடியும். தற்போது பழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்பிற்கு மாற்றாக இந்த ஈட் கப் இருக்கும்.
இந்த 'ஈட் கப்'பில் எந்தவிதமான செயற்கையான வண்ணங்களும், செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படாமல் முற்றிலும் தானியங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்கள் வரை 'கப்' மொருமொருப்பு தன்மையுடன் இருக்கும். சுற்றுச்சூழலுக்கு வரும் ஆபத்துக்கள், மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கவும் இந்த 'ஈட் கப்' உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்
தற்போது இந்த 'ஈட் கப்' ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கப்புகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஹதராபாத்தில் உள்ள ஷாமிர்பேட்டையில் தொடங்க ஜினோம்லேப் திட்டமிட்டுள்ளது.
ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT