Last Updated : 14 Sep, 2019 03:27 PM

1  

Published : 14 Sep 2019 03:27 PM
Last Updated : 14 Sep 2019 03:27 PM

‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி கண்டனம்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஓவைசி எம்.பி. : கோப்புப்படம்

கொல்கத்தா,

ஒவ்வொரு இந்தியர்களின் தாய்மொழி இந்தி மொழி அல்ல என்று அசாசுதீன் ஒவைசி எம்.பி.யும், அனைத்து மொழிகளையும் மதியுங்கள் என்று மம்தா பானர்ஜியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. இந்தி நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவி்த்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், " இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் தனக்கே சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருப்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்

இன்று, இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

ஓவைசி கண்டனம்

அமித் ஷாவின் இந்த ட்விட்டர் கருத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. அசாசுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்வி்டரில் கூறுகையில், " ஒவ்வொரு இந்தியரின் தாய்மொழி இந்தி மொழி அல்ல. இந்த தேசத்தில் பலருடைய தாய்மொழிகளையும், பன்முகத்தன்மையையும் அங்கீகரிக்க முயலுங்கள். ஒவ்வொரு இந்தியரும் விரும்பிய தனித்துவமான மொழியை, கலாச்சாரத்தை தேர்வு செய்ய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29 உரிமை வழங்கியுள்ளது. இந்தி, இந்து, இந்துத்துவாவைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரியது" எனத் தெரிவித்துள்ளார்.

தாய்மொழியை மறக்காதீர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தி நாள் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " இந்தி மொழிபேசும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் அனைத்து மொழிகளுக்கும், கலாச்சாரத்துக்கும் நாம் சரிசமமாக மதிப்பளிக்க வேண்டும். நாம் ஏராளமான மொழிகளைக் கற்கலாம் ஆனால், ஒருபோதும் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x