Published : 22 Aug 2019 02:52 PM
Last Updated : 22 Aug 2019 02:52 PM

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டம்; புதிய திட்டமா? சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டதா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா?, சுற்றுசூழல் அனுமதி பெறப்பட்டதா ? , இது பாரத் மாலா திட்டத்தின் கீழ் உள்ள திட்டமா ? அல்லது முற்றிலும் புதிய திட்டமா? என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் என பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.

அதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது எதிர்மனுதாரர்களையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அனைத்து எதிர்மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்து விட்டனரா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு “சிலர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை இந்த திட்டம் என்பது வளர்ச்சிக்கு முக்கியமானது மேலும் நாங்கள் முற்கட்டமாக ஆய்வு மேற்கோள்ள அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக எந்த சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் நாங்கள் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் சுற்றுசூழல் அனுமதி என்பது ஒரு நடைமுறையே தவிர, அது இந்த விவகாரத்தில் ஒரு பிரச்சினையே இல்லை முதலில் எங்களை நிலம் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

ஏனெனில் நிலம் கையகப்படுத்துதல் முதற்கட்டமே , மேலும் அந்த நிலத்தை மத்திய அரசு எடுத்து கொள்ளாது. அதேபோல கட்டுமானம் மேற்கொள்ள சுற்றுசூழல் அனுமதி வேண்டும், எனவே கட்டுமானம் என்பதை சுற்றுசூழல் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்வோம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக தேவைப்படும் நிலம் தொடர்பாக முறையாக விளம்பரம் செய்து, அது தொடர்பான கருத்துக்கள், ஆட்சேபனைகளை பெற்று அதன் பின்னர் உரிய இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்தலாம்.

அதேபோல நிலம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் பிறப்பித்து அதன் பின்னர் குறிப்பிட்ட கால அளவில் இழப்பீடு கொடுத்து நிலத்தை சரண்டர் செய்ய உத்தரவிடலாம், அல்லது பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “இந்த திட்டத்துக்கு சுற்று சூழல் அனுமதி யார் கொடுக்க வேண்டும்? மத்திய அரசா ? மாநில அரசா? ” என கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம் தான் அனுமதி கொடுக்க வேண்டும் என மத்திய அரசுத்தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

எதற்காக , எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றத்தால், இந்த நிலம் கையகப்படுத்தும் ஆணை ரத்து செய்யப்பட்டது? என நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு, “இந்த பாரத் மாலா சாலை திட்டமானது முதலில், சென்னை - மதுரை சாலைக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது அதற்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை, ஏனெனில் அது சாலை விரிவாக்கம் பணியாகும். ஆனால் சேலம் - சென்னை திட்டமானது முற்றிலும் புதிதானது.

அதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டும், காடுகள் அழிக்கப்படும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படும், விவசாய நிலம் கையகப்படுத்தப்படும், நதிகள் மேலாக செல்லும் எனவே இது முற்றிலும் புதியது. இதற்கு சுற்றுசூழல் அனுமதி மிக முக்கியம், அதேபோல கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும், ஆனால் அது கடைபிடிக்கப்படவில்லை.

மேலும் புதிதாக நெடுஞ்சாலையை உருவாக்க முடியாது என்பது நெடுஞ்சாலை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதேபோல மத்திய அரசின் இந்த திட்டம் சரியாக தயாரிக்கப்படவில்லை, விரிவாக இல்லை என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி திட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது”. என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில், “நிலம் கையகப்படுத்தும் பணி எந்த அடிப்படையில். மத்திய அரசு மேற்கொண்டது ? , சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா ?, சுற்றுசூழல் அனுமதி பெறப்பட்டதா ? , இது பாரத் மாலா திட்டத்தின் கீழ் உள்ள திட்டமா ? அல்லது முற்றிலும் புதிய திட்டம் ? , சுற்றுசூழல் அனுமதி பெற எத்தனை காலம் பிடிக்கும் ?, இந்த திட்டம் ஏற்கனவே எந்த நிலையில் தடைபட்டுள்ளது ?, என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக பதிலளிக்க வேண்டும்”

என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x