Published : 22 Aug 2019 02:45 PM
Last Updated : 22 Aug 2019 02:45 PM
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டார்.
இந்த பயணம் இந்தியாவுக்கும், இந்த 3 நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும், கூட்டுறவையும் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்லும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட மோடி, 26-ம் தேதிவரை பயணத்தில் இருந்து அதன்பின் நாடு திரும்புகிறார். முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி இன்றும், நாளையும் அங்கு தங்குகிறார். 23-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு நாடு, பஹ்ரைன் பயணம் செய்யும் பிரதமர் மோடி பின்னர் பாரிஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
அங்கு அந்நாட்டின் பிரதமர் எட்வார்ட் பிலிப் மற்றும் அதிபர் இமானுவேல் மெக்ரான் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள், வர்த்தக உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுகின்றனர்.
பிரான்ஸில் கடந்த 1950, 1950களில் இந்தியாவின் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் ஏராளமான இந்தியர்கள் பலியானார்கள். இவர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவரங்கில்அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
அதன்பின் 25 மற்றும் 26-ம் தேதிகளில் பாரீஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.
இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், " இந்தியாவுக்கும், பிரான்ஸ்க்கும் இடையே சிறந்த நட்புறவு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை பரிமாற்றி அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும். வலிமையான ராஜாங்க உறவுகள், பொருளாதார கூட்டுறவு போன்றவை இரு தரப்பு நாடுகளின் பரிமாற்றத்தால் ஏற்படும். இந்த பயணம் இருநாடுகளுக்குஇடையே பரஸ்பர வளர்ச்சி, அமைதி, மேம்பாடு ஆகியவற்றை கொண்டுவரும் நீண்டகால நட்பை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துக்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் இடையே 23 மற்றும் 24-ம் தேதிகளில் பிரான்ஸில் இருந்தவாறு ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை சந்தித்து பிரதமர் மோடி, சர்வதேச விவகாரங்கள், பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ஒத்துழைப்பு குறித்து பேச உள்ளார்
அபுதாபி இளவரசுருடன் இணைந்து, பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்விழாவுக்கான தபால்தலையையும் வெளியிடுகிறார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 24 மற்றும் 25-ம்தேதியில் பஹ்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். முதல்முறையாக பஹ்ரைன் நாட்டுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், " பிரதமரும் இளவரசருமான ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா உடனான சந்திப்பை எதிர்நோக்கி இருக்கிறேன். இந்த சந்திப்பு இருநாடுகலுக்குஇடையிலான நட்புறவை வலுப்படுத்தி, பிராந்திய, சர்வதேச விவகாரங்களை பரஸ்பரத்துடன் பேசிக்கொள்ள உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பயணத்தின் போது பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் இஷா அல் கலிபா உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசஉள்ளார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT