Published : 03 Aug 2019 11:20 AM
Last Updated : 03 Aug 2019 11:20 AM

புதிய முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு 

கோப்புப்படம்

புதுடெல்லி,

முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக இயற்றி நடைமுறைக்கு வந்துள்ள முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமைத்துல்லா என்ற முஸ்லிம் அமைப்பு ஒன்று முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. 

அதேபோல முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாகித் அலி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த இரு வழக்குகளிலும், இந்தச் சட்டத்தால், முஸ்லிம் கணவர்களின் அடிப்படை உரிமைகள் பிரிவு 14, 15, 21 ஆகியவை பறிக்கப்படும் விதமாக சட்டம் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின் ஒரு நாள் கழித்து இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறுகையில், " முத்தலாக் தடைச் சட்டத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தை அடையாளப்படுத்தியும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும். சமூகத்தில் ஒற்றுமையின்மையையும், நல்லிணக்கத்தையும் குலைத்துவிடும். இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஏராளமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதேசமயம், எதிர்க்கவும் செய்கிறார்கள். ஆனால், இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள முஸ்லிம் கணவர்களுக்குத் தண்டனை விதிக்கும் விதத்தைதான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். 

முத்தலாக் கூறினால் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் பிரிவு 4-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

முஸ்லிம் பெண்களை மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கையில் இருந்து காப்பது, இந்தச் சட்டத்தின் நோக்கமாக இருந்தாலும்,  எந்தப் பெண்ணும் தனது கணவர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க விரும்பமாட்டார். அதற்குப் பின்னணியில் எந்தக் காரணமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது. 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " புதிதாக கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டத்தில், முஸ்லிம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இது கணவன், மனைவிக்கு இடையே எதிர்காலத்தில் நடக்கும் அனைத்து சமரசங்களுக்கான கதவை அடைக்கும்விதத்தில் இருக்கிறது. 

முத்தலாக் கூறும் கணவரின் செயலை கிரிமினல் குற்றமாகக் கருதாமல், அதை சிவில் குற்றமாக, சாதாரண குற்றமாகக் கருத வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுக்கப்படலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x