Published : 23 Jul 2019 12:10 PM
Last Updated : 23 Jul 2019 12:10 PM

காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க மத்தியஸ்தத்தை மோடி கோரவில்லை: அமளிக்கிடையே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

படம் உதவி: ராஜ்யசபா டிவி

காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவை மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கோரவில்லை என மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கமளித்தபின்னர் அவையில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதால் மாநிலங்களவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்து அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.

அவையில் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்த அவையில் நான் திட்டவட்டமாக ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். காஷ்மீர் பிரச்சினையில் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி நிச்சயமாகக் கோரவில்லை.

பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளையும் இருநாட்டு தரப்பில் மட்டுமே ஆலோசிப்பது மூன்றாவது நபரின் தலையீட்டைக் கோருவதே இல்லை என்பதே இந்தியாவின் நிலையான கொள்கையாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்றால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

ஷிம்லா ஒப்பந்தமும், லாகூர் ஒப்பந்தமும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளை இருதரப்புகளுமே பேசித் தீர்த்துக்கொள்ள வழிவகுக்கிறது. இப்பிரச்சினையில் இன்று பிற்பகலில் பிரதமர் மோடி விளக்கமளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

கோஷமிட்ட எம்.பி.க்கள்.. கண்டித்த வெங்கய்ய நாயுடு..

வெளியுறவு அமைச்சரின் விளக்கத்தை ஏற்காமல் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, "இது தேசிய விவகாரம், தேச நலன் சார்ந்த இத்தகைய விவகாரங்களில் தேசத்தின் ஒற்றுமையையைப் பேணுவது அவசியம். நாம் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்" என்றார். பின்னர் அவையை பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைத்தார்.

மக்களவையிலும் எதிரொலித்த விவகாரம்..

இதே பிரச்சினையை முன்வைத்து மக்களவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் உறுப்பினர் கொடிக்குனில் சுரேஷ் நோட்டீஸ் வழங்கினார். மக்களவை கூடியவுடனேயே காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, "அமெரிக்காவிடம் இந்தியா தலைவணங்கிவிட்டது" என்றார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x