Published : 22 Jul 2019 05:17 PM
Last Updated : 22 Jul 2019 05:17 PM
புதுடெல்லி, பிடிஐ
என் சகோதரர் இறப்புக்காக மக்களவை ஒத்திவைக்கப்பட்ட முடிவில், யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இவர் எம்.பி.யாக இருக்கும்போதே மரணமடைந்ததால், இன்று மக்களவை கூடியதும் அவரின் மறைவுக்கும், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இரங்கல் குறிப்பை வாசித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மக்களவையை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஆனால், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
மக்களவை எம்.பி. ஒருவர் திடீரென காலமானால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அன்றைய அலுவல்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்படும். இதுதான் மக்களவை பாரம்பரிய நடைமுறை. நண்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவது என்பது வழக்கத்தில் இல்லாத நடைமுறை என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்து பிரச்சினையை கிளப்பினார்.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். இருந்தாலும், அவையை ஒத்திவைத்துவிட்டு மக்களவைத் தலைவர் புறப்பட்டுவிட்டார்.
இந்த சூழலில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ட்விட்டரில் எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், " எனது இளைய சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நண்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து நாடாளுமன்றம் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்றம், புதிய தீர்மானத்துடன் தொடங்கி இருக்கிறது. ஆதலால், நண்பகல் 2 மணிக்கு மேல் அலுவல்களைத் தொடரலாம். ராமச்சந்திர பாஸ்வான் தலித் மற்றும் நலிந்த பிரிவினரின் குரலாக மக்களவையில் ஒலித்தவர். என்னுடைய சகோதரர் இறப்பில் அரசியல் செய்யக் கூடாது " எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT