Published : 19 Jul 2019 02:51 PM
Last Updated : 19 Jul 2019 02:51 PM

பிஹாரில் தேசிய, மாநில விருதுகளுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள்: கற்பிக்கும் நூல்களின் பெயர் தெரியவில்லை

கோப்புப் படம்

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் தேசிய, மாநில விருதுகளுக்கு 23 அரசு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வில் அவர்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் நூல்களின் பெயர் கூடத் தெரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வருடந்தோறும் செப்டம்பர் 5-ல் வரும் ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கான மத்திய, மாநில விருதுகள் பிஹாரில் வழங்கப்படுகின்றன. இதற்காக அம்மாநில அரசின் பள்ளி மற்றும் மதரஸாக்களின் ஆசிரியர்கள் அதன் மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதை சரிபார்க்கும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களை அழைத்து நேர்முகத்தேர்வும் நடத்துகின்றனர். இதில் தேர்வு பெற்றவர்கள் மாநிலத் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.

மாநிலம் சார்பிலும் ஒரு நேர்முகத்தேர்வை நடத்தி ஆசிரியர்கள் பெயரை தேசிய விருதிற்காகவும் பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில், வரும் செப்டம்பரில் விருதிற்காக பிஹாரின் 23 பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களை மாவட்ட தலைமையகங்களுக்கு அழைத்த கல்வி அதிகாரிகள், நேர்முகத்தேர்வை நடத்தி உள்ளனர். அதில் மாணவர்களுக்கு அந்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாட நூல்கள் பற்றி கேட்டுள்ளனர். இதற்கு பெரும்பாலான ஆசிரியர்கள் அது பற்றி தமக்கு தெரியாது எனக் கூறி அதிகாரிகளை அதிர வைத்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹாரின் கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘இந்த வருடம் முதல் இணையதளம் மூலம் விருதிற்கான மனுக்கள் கோரப்பட்டது ஆசிரியர்களுக்கு பிரச்சனையாகி உள்ளது.

இதற்கு முன் நேரடியாக அல்லது தபால் மூலமான மனுக்களால் பலரும் லஞ்சம் கொடுத்து விருதுகளை பெற்றதாகப் புகார்கள் இருந்தன. இப்போது அவர்கள் நடத்தும் பாடநூல்களின் பெயர்களே ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதற்கு அந்த ஆசிரியர்கள் தாம் அமர்த்தப்பட்டதற்கானதை விடுத்து வேறு பாடங்களை போதிப்பது காரணம் ஆகும்.’  எனத் தெரிவித்தனர்.

பிஹார் மாநில பள்ளி ஆசிரியர்களின் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மறுதேர்விற்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகும் பல ஆசிரியர்களின் தகுதி கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையிலும் அவர்களில் பலர் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற முயன்றதால் இந்த அவலநிலை வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன் பிஹாரின் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிக்க சுவரில் தொங்கியபடி பலருக்கும் உதவியவர்களின் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x