Published : 25 May 2014 09:56 AM
Last Updated : 25 May 2014 09:56 AM

தேசியக் கட்சியாக உருவாகிறது தெலுங்கு தேசம்: தமிழகம், கர்நாடகத்தில் போட்டியிட முடிவு

சீமாந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தெலுங்கு தேசம் கட்சி, அடுத்த தேர்தலில், தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டு தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஆந்திர மாநிலத்தில், தெலுங்கர்களின் கவுரவத்தை நிலைநாட்ட தொடங்கப்பட்ட கட்சி தெலுங்கு தேசம் கட்சியாகும். மறைந்த நடிகர் என்.டி. ராமாராவ் இக்கட்சியை தொடங்கி வெறும் 9 மாதத்திலேயே ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தார்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 1983-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இக்கட்சி விளங்கி வருகிறது. இதற்கிடையே பல கட்சிகள் தோன்றினாலும், தெலுங்கு தேசம் கட்சிக்கென கணிசமான வாக்கு வங்கி உள்ளது. நடிகர் சிரஞ்சீவி, ஜெகன்மோகன் ரெட்டி, கிரண் குமார் ரெட்டி என பலர் கட்சிகளை தொடங்கினாலும், முக்கிய எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வந்தது.

மாநிலப்பிரிவினை தொடர்பாக இக்கட்சி, தெலங்கானா மற்றும் சீமாந்திரா ஆகிய இரு பகுதிகளிலும் மிகவும் சாதூர்யமாக நடந்து கொண்டது. அதனால்தான் தற்போது சீமாந்திராவில் ஆட்சியைப் பிடித்ததோடு மட்டுமின்றி, தெலங்கானாவில் எதிர்க்கட்சியாக செயலாற்ற உள்ளது.

நடந்து முடித்த தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த தெலுங்கு தேசம் மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடிக்க உள்ளது. அடுத்த கட்டமாக, தெலுங்கு தேசம் கட்சியை தேசிய கட்சியாக்குவதற்கு சந்திரபாபு நாயுடு திட்டம் வகுத்து வருகிறார். ஒரு கட்சி, தேசிய கட்சியாக உருவாக குறைந்த பட்சம் 3 மாநிலங்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற வேண்டும். அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தெலுங்கர்கள் அதிகம் உள்ளதால், இந்த மாநிலங்களில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வரும் 27, 28 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் நாயுடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x