Published : 05 May 2014 12:42 PM
Last Updated : 05 May 2014 12:42 PM
நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006–ம் ஆண்டு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பி.என்.தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலித்து தரமற்ற கல்வியை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மேல்முறையீடு செய்தன.
இந்நிலையில், 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தரம், உட்கட்டமைப்பு ஆகியனவற்றை ஆய்வு செய்து வரும் ஜூலை 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தமிழகத்தில் மட்டும் 17 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT