Published : 28 May 2014 05:19 PM
Last Updated : 28 May 2014 05:19 PM
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவை நீக்குவதற்கு, அரசியல் நிர்ணயச் சபையை கூட்ட வேண்டும். அது சாத்தியமற்றது. இச்சட்டப்பிரிவை ரத்து செய்தால், காஷ்மீர் இந்தியாவுடன் இருக்காது என்று முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.எஸ். ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ராம் மாதவ், “இச்சட்டப்பிரிவை நீக்கினாலும், நீக்காவிட்டாலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். அது ஒமர் அப்துல்லாவின் பரம்பரைச் சொத்து அல்ல” என்றார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் சர்ச்சை வலுத்துள்ளது.
பிரதமர் அலுவலக விவகாரத்துக்கான மத்திய இணை அமைச்சராக கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்ற ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. இது தொடர்பாக விரிவான விவாதம் தேவை” என்றார். இது காஷ்மீரில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தனது கருத்துத் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறும்போது, “இதுபோன்ற குழப்பங்கள், காஷ்மீர் மக்களை மேலும் அன்னியப்படுத்திவிடும். அரசியல் நிர்ணயச் சபையை மீண்டும் ஏற்படுத்தாமல், 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருப்பது உள்பட) நமக்கே சொந்தம் என்று கூறி வருகிறோம். பாஜகவும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது, ஒருவேளை அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்த விரும்பினால், அதற்கான உறுப்பினர்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து எவ்வாறு தேர்ந்தெடுக்க முடியும்? அரசியல் நிர்ணய சபையை மீண்டும் ஏற்படுத்த யாராலும் முடியாது.
ஒன்று 370-வது சட்டப் பிரிவு நடைமுறையில் இருக்கும் அல்லது இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்காது” என்றார்.
ஒமரின் இக்கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ராம் மாதவ் கூறும்போது, “370-வது சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருக்காது என்று ஒமர் அப்துல்லா கூறுவதற்கு, அந்த மாநிலம் ஒன்றும் அவரின் பரம்பரைச் சொத்து இல்லை” என்றார்.
அதற்கு பதிலளித்து ஒமர் அப்துல்லா கூறுகையில், “காஷ்மீர் எனது பரம்பரைச் சொத்து என்று ஒருபோதும் நான் கூறியதில்லை. இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில்தான் பேசினேன். அதற்கு எனக்கு உரிமையுள்ளது. எனது மாநிலத்திற்காகப் பேசுவதை ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் தடுக்க முடியாது” என்றார்.
ஜிதேந்திர சிங்கின் பேச்சுக்கு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஜிதேந்திர சிங்கின் பேச்சு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்திவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஒமருக்கு காங்கிரஸ் ஆதரவு
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி ட்விட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: “அரசியல் நிர்ணய சபையை கூட்டாமல் 370-வது சட்டப்பிரிவை நீக்க முடியாது என்று அச்சட்டப்பிரிவிலேயே கூறப்பட்டுள்ளது. இப்போது அரசியல் நிர்ணய சபை நடைமுறையில் இல்லை. எனவே, இச்சட்டப்பிரிவை ரத்து செய்வது சாத்தியமில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT