Published : 23 May 2014 12:00 AM
Last Updated : 23 May 2014 12:00 AM
குஜராத் மாநில முதல்வராக ஆனந்திபென் படேல் (73) வியாழக்கிழமை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆனந்திபென்னைத் தொடர்ந்து நிதின் படேல், ராமன் வோரா, பூபிந்திரசிங் சுதாசாமா, சவுரவ் படேல், கண்பத் வாசவா, பாபு போகரியா ஆகிய 6 கேபினட் அமைச்சர்களும், 14 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர்.
நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
ஆனந்திபென் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலானோர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். சங்கர் சவுத்ரி, தாராசந்த் செதா, பாச்சுபாய் கபத், காந்தி காமித் ஆகியோர் மட்டுமே புதுமுகங்கள்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த புருஷோத்தம் சோலங்கி, பர்பத் படேல், வாசன் அஹிர் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர்களுக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாநில அமைச்சர்களாக இருந்த லிலாதர் வகேலா, ஜஸ்வந்த்சிங் பாபோர் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆசிரியையாக இருந்து அரசியலில் நுழைந்த ஆனந்திபென், மோடியின் அமைச்சரவையில் வருவாய், நகர்ப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT