Published : 15 May 2014 10:00 AM
Last Updated : 15 May 2014 10:00 AM
நதிகளை இணைக்கப்போவதாக நரேந்திர மோடி கூறி வருகிறார். அதுபோன்ற திட்டம் மிகவும் அபாயகரமானது என பாஜக எம்.பி. மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நதிகளை இணைப்பது தொடர்பான திட்டம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்டது. கோமதி மற்றும் சாரதா நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து மேனகா காந்தியிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கோமதி-சாரதா நதிகளை இணைக்கும் குப்பைத் திட்டத்தைச் செயல்படுத்துவதிலிருந்து வாஜ்பாயை நான் தடுத்து நிறுத்தினேன். அது போன்ற திட்டங்கள் வெறும் குப்பை என்பதைத் தவிர வேறில்லை. நதிகளை இணைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. இதுபோன்ற மோசமான திட்டம் உலகில் வேறெதுவும் இருக்க முடியாது. ஒவ்வொரு நதிக்கும் தனித்த சூழல் அமைப்பு, மீன், காரம் மற்றும் அமிலத்தன்மைகள் உள்ளன.
ஒரு நதியை மற்றொரு நதியுடன் இணைப்பதால், அவ்விரு நதிகளுமே அழிந்துவிடும். நதிகளை இணைப்பது என்ற தவறான எண்ணமே கூடாது. ஒருவர் கால்வாய்களை அமைத்து, அவற்றை முறையாகப் பராமரிக்கலாம். ஆனால், கங்கையையும், கோமதியையும் இணைப்பது என்பது அந்த இரு நதிகளையும் கொன்று விடும். அது மிகவும் அபாயகரமானது.
நதிகளை இணைக்கும் திட்டத்துக்காக 10-15 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். அந்நிலம் பாழாக்கப்படும். யார் அந்த அளவு நிலத்தைக் கொடுப்பார் என மேனகா கேள்வியெழுப்பினார். நரேந்திர மோடி தன் பிரச்சாரத்தின் போது, வறுமை, வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT