Published : 15 May 2014 05:16 PM
Last Updated : 15 May 2014 05:16 PM
'இந்தியாவின் புதிய அரசை நிச்சயம் நரேந்திர மோடியே வழிநடத்தப்போகிறார். ஆனாலும் அவர் எவ்வளவு பலமான ஆட்சியை நடத்தினாலும் பிரச்சனைகளைச் சந்திப்பார்' என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி 250 முதல் 300 இடங்களைக் கைப்பற்றும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஹரித்வாரில் உள்ள ஜோதிட ரத்னா கௌசிக் என்பவர் செய்தி ஏஜென்சி ஒன்றிற்கு கூறுகையில், "அடுத்த பிரதமர் மோடிதான் என்றாலும் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல. இதனால் அக்டோபர் மாதம் அவர் பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். ஆனால், புதிய தேர்தல் வந்தாலும் மோடியே பலமான தலைவராக மீண்டும் வருவார்" என்றார்.
மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜோதிடரான மிலன் தாக்கூர் என்பவர் கூறும்போது, "மோடியின் கிரக நிலைகளைப் பார்க்கும்போது அவர்தான் பிரதமர் நாற்காலியைப் பிடிப்பார் என்று தெரிகிறது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளின் மூலம் அவருக்கு நெருக்கடிகள் ஏற்படும்" என்று கூறினார்.
கொல்கத்தாவில் உள்ள ஜோதிடர் ராகேஷ் ராஜ் குப்தா மேலே கூறியவர்களுக்கு மாறாக, "5 ஆண்டுகள் மோடியின் அரசு எந்த விதச் சிக்கல்களும் இன்றி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "மோடியின் ஆட்சிக் காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயரும். ஜூலை 2015 முதல் நவம்பர் 2015 வரையிலும், பிறகு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் மோடி அரசு சில நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 3வது அணி மோடி அரசுக்கு பெரும் அச்சுறுத்தல்களைக் கொடுக்கும்.
2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தன் கட்சியிலிருந்தும், எதிர்கட்சியிலிருந்தும் மோடி கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்" என்றார் குப்தா.
சென்னையைச் சேர்ந்த எச்.வெங்கட்ராமன் என்ற ஜோதிடர் மோடிதான் பிரதமர் என்று கூறுகிறார். ஆனாலும் கிரக நிலையில் குருவின் ஸ்தானம் மாறுவதால் டிசம்பர் மாதம் மோடி அரசுக்கு ஆட்டம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT