Published : 12 Jul 2019 06:44 PM
Last Updated : 12 Jul 2019 06:44 PM
தேசிய சராசரையைக் காட்டிலும் பிஹார் மாநிலத்தில் தனிநபர் வருவாய் குறைவாக உள்ளதால் சிறப்பு அந்தஸ்து தேவை என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
“சமூகப் பயன்பாட்டுத் திட்டங்களில் பயனடைவோருக்கான தொகையை அளிப்பதில் ஹரியாணா, தமிழ்நாடு ஆகியவற்றை பிஹாருடன் ஒப்பிடுகிறீர்கள், ஆனால் அம்மாநிலங்களின் தனிநபர் வருவாயையும் நம் மாநில தனிநபர் வருவாயையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பிஹாரின் தனிநபர் வருவாய் ரூ.40,000த்திற்கும் குறைவு, இது தேசிய சராசரையைக் காட்டிலும் குறைவு. அதனால்தான் சிறப்பு அந்தஸ்து கேட்கிறோம்” என்றார் நிதிஷ் குமார்.
இன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஷேமநலத்திட்டங்களுக்காக பிஹார் அரசு செலவிடும் தொகை தமிழகம், ஹரியாணா, ஆந்திரா, தெலங்கானாவைக் காட்டிலும் குறைவு என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
உதாரணமாக பென்ஷன் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு பிஹாரில் வழங்கப்படும் தொகை ரூ.400, ஆனால் தமிழகத்தில் இது ரூ.1000, ஹரியாணாவில் ரூ.1800, ஆந்திராவில் ரூ.2000 என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
பிஹாரிலிருந்து ஜார்கண்டை தனியாகப் பிரித்த தினத்திலிருந்தே சிறப்பு அந்தஸ்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது, காரணம் கனிம வளங்கள் ஜார்கண்ட்டிற்கு சென்று விட்டது. இதனால் மாநில வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது நிதிஷ் குமாரின் வாதம்.
ஆனால் ஆர்ஜேடி தலைவரும் எம்.எல்.ஏ.யுமான அப்துல் பாரி சித்திகி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநில பட்ஜெட் இந்த ஆண்டு ரூ.2.05 லட்சம் கோடியாகும். இது முந்தைய பட்ஜெட்டுகளை விட ஒப்பீட்டளவில் அதிகமாகும், பிறகு ஏன் ஷேமநலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் மட்டும் குறைய வேண்டும் என்பதே எங்கள் கேள்வி. சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. ஆகவேதான் அரசின் முன்னுரிமைகள் பட்டியலி இதெல்லாம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT