Published : 01 Jul 2017 08:27 AM
Last Updated : 01 Jul 2017 08:27 AM
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர்.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமார் ஆகியோர் போட்டியிடு கின்றனர்.
கடந்த 23-ம் தேதி ராம்நாத் கோவிந்தும், 28-ம் தேதி மீராகுமாரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்
டெல்லியிலிருந்து காலை 11 மணி அளவில் சென்னை வரும் ராம்நாத் கோவிந்துக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதிமுக இரு அணிகளிலும் உள்ள 50 எம்.பி.க்கள், 134 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 3 மணி அளவில் கிண்டியில் உள்ள ஹோட்டல் ஐடிசி சோழாவில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரெங்கசாமி மற்றும் அவரது கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களை சந்திக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள பாஜகவின் ஒரே எம்எல்ஏவான முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபாலையும் ராம்நாத் கோவிந்த் சந்திக்கிறார்.
முதல்வருடன் சந்திப்பு
மாலை 4 மணி அளவில் சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்.பி., எம்எல்ஏக்களை ராம்நாத் கோவிந்த் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 5 மணி அளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்த சந்திப்புகளின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மீராகுமார்
காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை வருகிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
இரவு 7 மணி அளவில் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார். இரவு 8 மணி அளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.
திமுகவுக்கு 4 எம்.பி.க்கள், 89 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 8 எம்எல்ஏக்களும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்எல்ஏவும் உள்ளனர்.
பாஜகவுக்கு அதிக ஆதரவு
ஆளும் அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு அளித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 2 எம்.பி.க்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளதால் அங்கும் ராம்நாத் கோவிந்துக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் ஒரே நாளில் சென்னை வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம், கிண்டி ஹோட்டல் ஐடிசி சோழா, ரஷ்ய கலாச்சார மையம், கலைவாணர் அரங்கம், எம்.ஆர்.சி. நகர் லீலாபேலஸ், கோபாலபுரம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT