Last Updated : 25 Jun, 2017 11:12 AM

 

Published : 25 Jun 2017 11:12 AM
Last Updated : 25 Jun 2017 11:12 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொது கலந்தாய்வில் பங்கேற்க 34 நிகர்நிலை பல்கலை.க்கு யுஜிசி உத்தரவு

பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்) மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்கு மாறு 34 நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தர விட்டுள்ளது.

இதனால் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 100 சதவீத இடங்களையும் தாங்களே நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘நீட்’ எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தகுதிபெற்ற மாணவர்களை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப்படிப்பில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத சேர்க்கைக்காக, மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவ சேவை இயக்குநர் ஜெனரல் (Director General Health Service-டிஜிஎச்எஸ்) அலுவலகம் பொது கலந்தாய்வு நடத்துகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நாட்டில் உள்ள 34 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி நேற்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

இது குறித்து யுஜிசி இணைச் செயலாளர் சுனிதா ஸ்வாச் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கடந்த 2017, மே 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளை போல், நிகர்நிலை பல்கலைக்கழங்களும் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டும். மேலும் இவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்காக டிஜிஎச்எஸ் அடுத்த மாதம் நடத்தும் பொது கலந்தாய்வில் நிகர்நிலை பல் கலைக்கழகங்களும் பங்கேற்க வேண்டும். மதம் மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையி னர் நடத்தும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கும் இது பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 100 சதவீத இடங்களையும் தாங்களே நிரப்பி வந்தன. நீட் அமலுக்கு வந்த பிறகு அதில் தகுதி பெற்ற மாணவர்களை சேர்த்தன. என்றாலும் பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் ரேங்க் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கவில்லை.

இது தொடர்பான புகாரை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வெளியான உத்தரவை தொடர்ந்து இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசுகளுடன் ஆலோசித்து டிஜிஎச்எஸ் முடிவு செய்யும். இதற்கான அறிவிப்பு பொது கலந்தாய்வுக்கு முன்பாக வெளியிடப்பட வேண்டும் எனவும் யுஜிசி தனது சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மீத முள்ள 85 சதவீத மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் யுஜிசி விரைவில் புதிய உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக யுஜிசி வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x