Published : 09 Nov 2013 11:27 PM Last Updated : 09 Nov 2013 11:27 PM
சிபிஐ மீதான குவஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை
சிபிஐ சட்டபூர்வமற்ற அமைப்பு என்று குவஹாட்டி உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை விடுமுறை என்பதால் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று மனுவை தாக்கல் செய்தார்.
குவஹாட்டி தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சனிக்கிழமை அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், சிபிஐ அமைப்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இந்த புலனாய்வு அமைப்பு மிகப் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமற்றது என்று குவாஹாட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பு முற்றிலும் தவறானது. இதனால் சிபிஐ சார்பில் நடத்தப்படும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணைகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலன் விசாரணைகளும் பாதிக்கப்படும். நீதித் துறையின் நலன் கருதி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி பி. சதாசிவம் வீட்டில் சனிக்கிழமை மாலை விசாரணை நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆஜரானார். அவர் வாதாடியபோது, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படாவிட்டால் நீதித் துறையில் பெரும் குழப்பம் நேரிடும் என்றார்.
குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற நவேந்திர குமார் தரப்பில் வழக்கறிஞர் செளத்ரி ஆஜரானார். அவர் வாதாடும்போது, குவாஹாட்டி உயர் நீதிமன்ற வழக்கில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகம் பிரதிவாதியாக இல்லை. எனவே, அந்த அமைச்சகம் விடுமுறை கால அமர்வில் மனு தாக்கல் செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவுப் பிறப்பித்தது. மனுதாரர் நவேந்திர குமார் தனது அனைத்து ஆட்சேபங்களையும் பதில் மனுவாக தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பான அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
குவஹாட்டி தீர்ப்பின் விவரம்...
முன்னதாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் நவேந்திர குமார் தன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1963-ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு மூலம் சிபிஐ உருவாக்கப்பட்டது, அந்த அமைப்புக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திரா ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சகம் 1963 ஏப்ரல் 1-ல் நிறைவேற்றிய ஓர் தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை.
எனவே, சிபிஐ அமைப்பை போலீஸ் படையாகக் கருத முடியாது. அந்த அமைப்பு குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்டவிரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்பட மிக முக்கியமான பல்வேறு வழக்குகளை சிபிஐ இப்போது விசாரித்து வருகிறது. குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பால் அந்த அமைப்பே கேள்விக்குறியாகியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு
குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆ. ராசா உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை தடை கோரினர்.
2ஜி வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு சர்மா, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தீர்ப்பை தனது ஐ-பேடில் காட்டினார்.
சிபிஐ அமைப்புக்கு வழக்குகளை பதிவு செய்ய அதிகாரமில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் 2ஜி அலைக்கற்றை விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் அந்தக் கோரிக்கையை, சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT