Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-ம் கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிமெதரா மாவட்டம், பிந்தர்வானி வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரரின் துப்பாக்கியில் இருந்து தவறுதலாகக் குண்டுபாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத் தேர்தல் 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 18 ஆயிரத்து 15 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணிகளில் 80 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இணை தலைமை தேர்தல் அலுவலர் டி.டி.சிங், பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், “19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிமெதரா மாவட்டம், சஜா தொகுதியில் உள்ள பிந்தர்வானி வாக்குச் சாவடி மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரரின் துப்பாக்கியில் இருந்து தவறுதலாக குண்டு பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்” என்றார். மாநில டி.ஜி.பி. ராம் நிவாஸ் கூறுகையில், “குடிபோதையில் இருந்த 5 பேர், பிந்தர்வானி கிராமத்துக்கு வந்தபோது, அங்கிருந்த சி.ஆர்.பி.எப். வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வீரரின் தூப்பாக்கியிலிருந்து தவறுதலாக குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்துவிட்டார். காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்” என்றார்.
ராய்ப்பூர் நகர வடக்கு தொகுதி யில் மாநில ஆளுநர் சேகர் தத், காவார்தா தொகுதியில் முதல்வர் ரமண் சிங், பிகா தொகுதியில் சட்டமன்றத் தலைவர் தரம்லால் கவுசிக், சஜா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரவீந்திர சவுபே வாக்களித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT