Published : 19 Sep 2013 04:01 PM
Last Updated : 19 Sep 2013 04:01 PM
பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் நாகர் (53), தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பினார்.
வேலை கேட்டு வந்த பெண்ணை, கடந்த 11-ம் தேதி தனது வீட்டுக்கு வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாபுலால் நாகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் மாநில சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு அமைச்சரின் வீட்டுக்கு சென்ற போலீஸ் உயரதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. போலீஸார் வீட்டுக்கு வந்ததை உறுதி செய்த அமைச்சர், தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பாபுலால் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்துக்கு இன்று காலை அனுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராஜினாமா செய்யக் கோரி யாரும் என்னை வற்புறுத்தவில்லை, எனினும் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காத வகையில் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.
முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் இல்லை. அவர் தலைநகர் திரும்பிய பின்னரே ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுக்கப்படும். எனினும், இந்த விவகாரம் குறித்து முன்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர், சட்டம் தன் கடமையைச் செய்யும், சட்டத்தைவிட பெரியவர்கள் யாரும் இல்லை என்று கூறியது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT