Last Updated : 29 Nov, 2013 09:40 AM

 

Published : 29 Nov 2013 09:40 AM
Last Updated : 29 Nov 2013 09:40 AM

விவசாயி மரணத்தால் கர்நாடக பா.ஜ.க தொடர் போராட்டம் - முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கோரிக்கை

கர்நாடக சட்டமன்றத்திற்கு முன்பாக கரும்பு விவசாயி ஒருவர் பூச்சிமருந்து குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டதால்,அம்மாநில முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

விவசாயியின் மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் எனக்கூறி விவசாயிகளும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெல்காமில் உள்ள சட்டமன்றத்தில்(சுவர்ண சவுதா) கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது.

கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளில் இருந்து தொடர்ந்து 3 நாட்களாக கரும்பு விவசாயிகள், ‘கரும்பின் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி’போராட்டம் நடத்தினர்.

அரசு அவர்களது கோரிக்கையை ஏற்காதததால் புதன்கிழமை காலை விட்டல் ஹரபாவி(60) என்ற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். விவசாயியின் மரணத்திற்கு முதல்வர் சித்தராமையாவே காரணம் என எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை சட்டப்பேரவைக்கு வருகையில் பா.ஜ.க.வினர் கருப்பு துண்டு அணிந்து விவசாயியின் மரணத்திற்கு துக்கம் அனுசரித்தனர். மேலும் அவை தொடங்கியதும் மையப்பகுதிக்கு வந்த பா.ஜ.க.வினர் ‘சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என கூச்சலிட்டனர்.பா.ஜ.க.வினரின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எடியூரப்பாவின் க.ஜ.த.வினரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் சபாநாயர் காகோடு திம்மப்பா அவையை 2 மணி நேரத்திற்கு ஒத்தி வைத்தார். இதனைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் சுவர்ண சவுதாவிற்கு வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மீண்டும் அவை தொடங்கியதும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக சட்டசபை கூட்டத்தொடரை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் முதல்வர் சித்தராமையா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். விவசாயியின் மரணத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அரசியல் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடரும் போராட்டம்!

சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சி களின் தர்ணா தொடர்கையில் மறுபக்கம் சட்டமன்றத்திற்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட க‌ரும்பு விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4-வது நாளாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின் போது முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராகவும், அரசிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

பெல்காமைத் தொடர்ந்து மைசூர்,மண்டியா,ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பின் கொள்முதல் விலையை 2,500 ரூபாயில் இருந்து 3,500 ரூபாயாக உயர்த்தும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x