Published : 11 Oct 2013 01:27 PM
Last Updated : 11 Oct 2013 01:27 PM
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் சமர்ப்பிக் கப்படும் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவதில்லை. அவற்றின் விவரங்கள் நாடாளுமன்றத்தில் மட்டுமே வெளியாகும். இந்த மரபை உடைக்கும் வகையில் முதன்முறையாக 2 ஜி அலைக்கற்றை ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் மீதான தனது ஆட்சேபணை அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது பாஜக.
36 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் நகலை டெல்லி அசோகா சாலையில் உள்ள கட்சி தலைமையகத்தில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வெளியிட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது: 'இந்த கூட்டுக் குழுவின் தலைவரான பி.சி. சாக்கோ, கூட்டுக்குழு பற்றி நாடாளுமன்றத்தில் மட்டுமே வெளியிடக் கூடிய தகவல்களை வெளியில் பேச துவங்கினார். குழுவின் விதிமுறைகளை அதன் தலைவரே மீறியதால் நாங்கள் எங்கள் ஆட்சேபணையை வெளியிட வேண்டியதாகிவிட்டது. மேலும், நாங்கள் கூட்டுக்குழுவிடம் கொடுத்த ஆட்சேபணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது அதை சுருக்கியோ அல்லது மாற்றியோ விடுவார்கள் என்ற பயம் உள்ளது. எனவே, அதன் நகலை இப்போது வெளியிடுகிறோம்.
'ராஜாவை கூட்டுக் குழு முன் ஆஜர்படுத்த திமுகவும் கடுமையாக முயன்றது. அதற்கு அனுமதிக்கப்பட்டு விடுமோ என பயந்து சாக்கோ இடையில் குழுவை கூட்டவில்லை. குழுவின் உறுப்பினராக இருந்த திருச்சி சிவாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடியும் வரை பொறுத்திருந்து, செப்டம்பர் 27-ல் குழுவை கூட்டியதுடன் அதை தனக்கு சாதகமாகவும் முடித்துக்கொண்டார்’ என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்வந்த் சிங், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT