Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM
வலுவான வறுமைச் சுவரை உடைத்தெறிவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்தார்.
ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு சாலை வசதி, ரயில் பாதை இணைப்பு, விமான நிலையங்கள் தேவைதான். அதேநேரம் ஏழை எளிய மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டியது நம்முடைய கடமை.
வறுமைச் சுவரை உடைத்தெறிய ஏழை, எளிய மக்களுக்கு காங்கிரஸ் கை கொடுத்து உதவுகிறது. ஆனால் பாஜகவின் கொள்கை வேறு. அந்தக் கட்சி ஏழைகளின் தலையை அந்தச் சுவரில் மோதி உடைக்க விரும்புகிறது. இதுதான் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்.
ஏழைகள் பசியோடு படுத்துறங்குகிறார்கள். சாலைகளோ, விமான நிலையங்களோ அவர்களின் பசியைப் போக்காது. அதனால்தான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி வறுமைக்கோட்டுக்கு மேல், கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரு கிறது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் கெலோட்டுக்கு பாராட்டு
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை, இலவச மருந்துகள் வழங்கும் திட்டம் ராஜஸ்தானில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றார்.
முதல்வர் கெலோட், மத்திய அமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மோடியைப் பின்பற்றிய ராகுல்
வழக்கமாக அமைதியாக, சில நேரங்களில் ஆவேசமாகப் பேசும் ராகுல் காந்தி தனது பிரசார உத்தியை இப்போது மாற்றியுள்ளார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசார பாணிக்கு ராகுல் மாறியிருப்பதாகத் தெரிகிறது.
முதல்வர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது, அவ்வப்போது கூட்டத்தினரை பார்த்து நான் சொல்வது சரியா என்று கேட்டு அவர்களைப் பதிலளிக்கச் செய்வார்.
புஷ்கர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இதே பாணியை பின்பற்றினார்.
தனது பேச்சின் இடையே பெண்களைப் பார்த்து நான் சொல்வது சரியா என்று ராகுல் கேள்வி எழுப்பினார். அவருக்குப் பதிலளித்த கூட்டத்தினர், நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT