Published : 18 Oct 2013 09:58 AM Last Updated : 18 Oct 2013 09:58 AM
கே.ஜி. பாலகிருஷ்ணனை பதவி நீக்கக் கோரும் மனு: தீவிரமான விவகாரம் என உச்ச நீதிமன்றம் கருத்து
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணனை பதவி நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையில் அவசரப்பட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது தவறான நடத்தை மற்றும் பினாமி பெயரில் சொத்து சேர்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவரை தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள இம்மனு, நீதிபதிகள் பி.எஸ். சௌகான், எஸ்.ஏ. போப்தே ஆகியோரடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:
இது மிகத் தீவிரமான விவகாரம். இதில் முடிவு எடுக்கும் முன் மனுவை மிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டியுள்ளது. அவசரமாக முடிவெடுக்க நீதிமன்றம் விரும்பவில்லை. எந்தச் சூழலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரை நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்பது ஆராயத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது அவரின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததா அல்லது மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருக்கும்போதா என்பதைக் கவனமாக ஆராய வேண்டியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும்போது தவறிழைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவரைப் பதவி நீக்கக் கோர முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு தலைமை வழக்குரைஞர் மோகன் பராசரன் கூறுகையில், "மனித உரிமைகள் ஆணையத் தலைவர் என்பது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நீட்சி அல்ல. இது வேறு விதமானது" என்றார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், "குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தபோது, பாலகிருஷ்ணன் மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருக்கிறார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்ற வகையில், கோல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சௌமித்ரா சென் மோசமான நடத்தை மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்டார் என்பதற்காக அவரை நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதாவது சௌமித்ரா சென் நீதிபதியாவதற்கு முன் செய்த குற்றங்களுக்காக அவர் நீதிபதி பொறுப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனித உரிமை ஆணையத்தலைவர் மற்றும் நீதிபதி ஆகியோரைப் பதவி நீக்கம் செய்வதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விதிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன" என அவர் வாதிட்டார். விரிவான வழக்கு விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT