Published : 27 Jun 2017 09:42 AM
Last Updated : 27 Jun 2017 09:42 AM
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிதாக பொருத்தப்பட்ட தங்க கொடி மரத்தை சேதப்படுத்தியாக ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்பன் கோயிலில் தங்க தகடுகளால் ஆன புதிய கொடி மரம் நேற்று முன்தினம் பொருத்தப் பட்டது. ரூ.3.2 கோடி மதிப்பிலான இந்த மரத்தை ஹைதராபாத் தைச் சேர்ந்த பீனிக்ஸ் இன்ப் ராடெக் நிறுவனம் நன்கொடை யாக வழங்கியது.
இந்தக் கொடிமரம் பொருத்தப் பட்ட சிறிது நேரத்தில் அதன் பீடத்தில் (பஞ்சவர்கதாரா) ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் அச்சமடைந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் யாரோ பாதரசத்தை ஊற்றியதே இதற்குக் காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கொடிமரத்தின் அடிப்பகுதியில் சிலர் திரவத்தை ஊற்றியது தெரியவந்தது. அதன் அடிப்படையில், பம்பாவில் இருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப் பாளர் சதீஷ் பினோ ‘தி இந்து’விடம் (ஆங்கிலம்) கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் உஜுரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தங்கள் ஊர் வழக்கப்படி நவதானியத்துடன் பாதரசத்தை ஊற்றியதாக அவர் கள் தெரிவித்தனர். அவர்களிட மிருந்து சிறிய பாட்டில் கைப் பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப் பட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பத்தனம்திட்டாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்றார்.
இதனிடையே, திருவனந்த புரத்தில் உள்ள தடயவியல் ஆய்வக நிபுணர்கள் நேற்று முன்தினம் இரவு கொடிமரத்தை ஆய்வு செய்து, மாதிரியை எடுத்துச் சென்றனர். மேலும், கொடிமரத்தை உருவாக்கிய கலைஞர், கோயில் தலைமை பூசாரியின் அனுமதி பெற்று, கொடிமரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதரசத்தை அகற்றி சரி செய்தார்.
சபரிமலை கோயிலுக்கு தீவிரவாத அமைப்புகள் சமீபத் தில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, கொடிமரத்தைச் சேதப்படுத்தி யவர்கள் பற்றி மத்திய புலனாய்வு அமைப்பின் சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆந்திர போலீஸாரும் பத்தனம்திட்டாவுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT