Published : 27 Mar 2014 12:00 AM
Last Updated : 27 Mar 2014 12:00 AM
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே என மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி நிருபர்களிடம் புதன்கிழமை பேசியதாவது: பாஜக பலூன் வெடித்துச்சிதறப்போகிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு தீங்கு தரும்.
இந்தியா ஒளிர்கிறது என 2004-ல் பாஜக முழக்கமிட்டு தேர்தலை எதிர்கொண்டது. அந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாமல் காற்று போன பலூன்போல பாஜக அடங்கியது.
இந்திய சிந்தனைகளுக்கு எதிரானது மோடியின் கொள்கை கள். இந்த கொள்கைகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் காங்கிரஸ் செயல்படும்.
நடைபெறப் போகிற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான தோல்வி அடையப் போவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தேர்தல் முடிவு இந்த கணிப்புகளுக்கு மாறாக அமைந்து அனைவரையும் மிரள வைக்கப் போகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினர் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தலில் தமக்கு வெற்றி உறுதி என்கிற தொனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரம் எப்படி இருண்டு போனதோ அதே போல இப்போதும் பாஜக பிரச்சார பலூன் வெடித்துச் சிதறப் போகிறது.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நான் சொல்வது உண்மையாகப் போகிறது.
மோடி மீது தாக்கு
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித குறையோ எதிர்ப்போ கிடையாது. மாறாக இந்திய சிந்தனைக்கு எதிரான அவரது கொள்கைகளையே நான் எதிர்க்கிறேன். எதனோடும் ஒட்டாத கொள்கைகளை பிரதிபலிக்கிறார் மோடி என்றார் ராகுல்.
மோடி ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவு தரும் என பிரதமர் மன்மோகன் சிங் இரு மாதங்களுக்கு முன் பேசியது சரியென ஒப்புக் கொள்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு ராகுல் ஆம் என்றார்.
பிறரை நன்கு எடை போட்டு அவர்களை சரியாக கணிப்பதில் தேர்ந்தவர் பிரதமர். பெரும்பாலான விவகாரங்களில் எனக்கு அவருடன் உடன்பாடுதான். அவரது அனுபவ அறிவை நான் முழுமையாக ஏற்கிறேன்.
காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடையும் என்றும் எங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அலை இருப்பதாகவும் 2009லும் கருத்துக் கணிப்புகள் ஆரூடம் கூறின. உ.பி.யில் வெறும் 5 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் அங்கு 22 தொகுதிகள் பெற்றோம் என்றார் ராகுல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT