Published : 28 Jun 2017 10:06 AM
Last Updated : 28 Jun 2017 10:06 AM
மைசூருவில் உள்ள கலா மந்திர் அரங்கில் சமூக பண்பாட்டு அமைப்பின் சார்பில் ‘தனி நபரின் சுதந்திரமும், உணவு உரிமையும்’ என்ற தலைப்பில் 3 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவான், பேராசிரியர் மகேஷ் சந்திரகுரு, சமூக செயற்பாட்டாளர் சிவராம் உள்ளிட்டோர் பங்கேற் றனர். அரங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதிய உணவின் போது பங்கேற்பாளர்களுக்கு ஆட் டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மைசூரு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சம்பத் தலைமையிலான பலர், நேற்று கலா மந்திருக்குள் நுழைந்து மாட்டிறைச்சி விருந்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்ட கலா மந்திர் அரங்கம் மற்றும் வளாகத்தில் பசுவின் கோமியத்தை மாவிலையால் தெளித்தனர். இதன் மூலம் கலா மந்திர் புனிதம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு பாஜக எம்.பி. ஷோபா கரந்த லாஜே எழுதிய கடிதத்தில், “மைசூரு பல்கலைக்கழக பேராசிரியரான மகேஷ் சந்திர குரு தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறார். அரசுப் பணியில் இருக்கும் அவர், அரசு இடத்தில் சட்டத்தை மீறும் வகையில் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT