Published : 27 Jun 2017 08:27 AM
Last Updated : 27 Jun 2017 08:27 AM
கர்நாடக எம்எல்ஏக்களைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட விவகாரத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு ‘இந்திய எடிட்டர்ஸ் கில்ட்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக பாஜக எம்எல்ஏ எஸ்.ஆர்.விஸ்வநாத், காங்கிரஸ் எம்எல்ஏ பி.என்.நாகராஜ் ஆகியோருக்கு எதிராக ‘ஹாய் பெங்களூர்', ‘எலஹங்கா வாய்ஸ்' ஆகிய இரு பத்திரிகைகள் கடந்த 2014-ம் ஆண்டு செய்தி வெளியிட்டன. இதையடுத்து எம்எல்ஏக்கள் இருவரும் ‘ஹாய் பெங்களூர்' பத்திரிகையின் ஆசிரியர் ரவி பெலகெரே, ‘எலஹங்கா வாய்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் அனில் ராஜூ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கர்நாடக சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் குழு, 2 பத்திரிகை ஆசிரியர்களுக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்குமாறு பரிந்துரை செய்தது. இதன்படி கடந்த வாரம் சபாநாயகர் கே.பி.கோலிவாட், ‘இந்திய அரசமைப்பு சட்டம் 194-ம் பிரிவின் கீழ் எம்எல்ஏக்களைப் பற்றி அவதூறு செய்தி செய்தி வெளியிட்ட ரவி பெலகெரே, அனில் ராஜூ ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தலைமறைவான ரவி பெலகெரே, அனில் ராஜூ ஆகிய இருவரையும் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தலைமையிலான போலீஸார் தேடி வருகின்றனர்.
அதிகார துஷ்பிரயோகம்
இந்நிலையில் இந்திய ‘எடிட்டர்ஸ் கில்ட்’ (இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம்) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பத்திரிகை ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதித்தது கண்டிக்கத் தக்கது. இது இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்கு எதிரானது. பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்கும் விதமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் மீதான அவதூறு செய்திக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாம். சபாநாயகரும் இதே கருத்தை எம்எல்ஏக்களுக்கு பரிந்துரை செய்திருக்கலாம். அதை விடுத்து பத்திரிகை ஆசிரியர்களைத் தண்டித்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல. சபாநாயகரும், எம்எல்ஏக்களும் தங்களது பொறுப்பை உணராமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
இது தொடர்பாக கர்நாடக செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு இரு எம்எல்ஏக்களும் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு தண்டனையை பரிந்துரைத்தது. அதன்படி சபாநாயகர் தண்டனை அளித்துள்ளார். எனவே கர்நாடகாவில் ஆளும் காங்கிஸை பத்திரிகையாளர்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT