Published : 24 Nov 2013 04:17 PM
Last Updated : 24 Nov 2013 04:17 PM

பதவி ஆசை நஞ்சுடன் வாழ்கிறது காங்கிரஸ்: மோடி பதிலடி

காங்கிரஸ் கட்சியே அதிக விஷம் நிறைந்த கட்சி, அக்கட்சி 'பதவி ஆசை' என்ற நஞ்சுடன் வாழ்கிறது என நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர்: காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசினார். பா.ஜ.க. நஞ்சு நிறைந்த கட்சி என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர்:

காங்கிரஸ் கட்சியை விட நச்சுத் தன்மை நிறைந்த கட்சியைப் பார்க்க முடியாது. ஏனெனில், காங்கிரஸ் கட்சி அரை நூற்றாண்டுக்கும் மேலாக 'பதவி ஆசை' என்ற நஞ்சுடன் வாழ்ந்து வருகிறது.

ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பதவி என்பது விஷம் போன்றது என தன் அன்னை தன்னிடம் கூறியதாகப் பேசினார். அரை நூற்றாண்டுக்கு மேலாக பதவியில் இருக்கிறது காங்கிரஸ். அப்படி என்றால் விஷம் நிறைந்தவர்கள் யார் என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள் என்றார்.

ராகுல் ஏழ்மையைப் பற்றியும் ஏழை மக்கள் மீது தாம் கொண்டுள்ள பரிவு பற்றியும் ஊடகங்கள் முன் மட்டுமே பேசுவார். ஆனால் யதார்த்தத்தில் அவருக்கு வறுமையைப் பற்றி எதுவும் தெரியாது. ஏழை மக்கள் மீது அக்கறையும் இல்லை. அப்படி இருந்திருந்தால், குடிசைகளுக்குச் சென்று மீடியாக்களுக்கு ஃபோட்டோ போஸ் கொடுக்கும் அவர், டெல்லியில் அவர் வசிக்கும் பங்களாவுக்கு அருகில் இருக்கும் குடிசைப்பகுதிக்கு சென்றிருப்பார். அவர்களுக்காக ஏதாவது செய்திருப்பார்.

2009- தேர்தல் வாக்குறுதியில் ஆட்சியேறிய 100 நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என கூறியிருந்தது காங்கிரஸ். ஆனால் அவர்கள் வாக்குறுதி என்னவாயிற்று? மக்களை மோசடி செய்த காங்கிரஸை மக்கள் மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது என நரேந்திர மோடி பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x