Published : 14 Nov 2013 09:08 PM
Last Updated : 14 Nov 2013 09:08 PM
கர்நாடக மாநிலத்தில் வால்வோ பஸ் எரிந்து விபத்துக்குள்ளனாதில் 7 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தனியார் பேருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் இருந்து மும்பைக்கு சென்ற வால்வோ பஸ்ஸின் டீசல் டேங்க், சாலையோர தடுப்பில் மோதியதால் அந்த பஸ் எரிந்து சாம்பலானது.
புதன்கிழமை நள்ளிரவில் நடந்த இக்கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்துள்ள 25-க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விபத்திற்குள்ளான 'நேஷனல் டிராவல்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.வுமான ஜமீர் அகஹமது கான் கூறும்போது, "இது மிகவும் துயரமான சம்பவம். பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்ச ரூபாயை எங்கள் நிறுவனம் வழங்கும். விபத்தில் காயம் அடைந்தவர்களின் அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வோம். தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளது" என்றார்.
இதனிடையே, இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேலும், டிராவல்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், அவர்களின் பேருந்துகளின் நிலையையும் கண்காணிக்க மோட்டார் வாகனசட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வால்வோ பஸ் மஹபூப் நகர் அருகே, இதேபோல டீசல் டேங்க் வெடித்து விபத்தில் சிக்கியதில் 45 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT