Published : 04 Nov 2013 03:04 PM
Last Updated : 04 Nov 2013 03:04 PM
தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த தேர்தல் ஆணைய நோட்டீஸுக்கு பதிலளிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 4 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் இன்று (திங்கள்கிழமை) முற்பகல் 11.30 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருந்த நிலையில், பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்துக்கு ராகுல் காந்தி தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், அக்டோபர் 31-ம் தேதிதான் தன்னிடம் நோட்டீஸ் கிடைத்தது என்றும், தனது வழக்கறிஞரிடம் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பணி நிமித்தமாக, குறித்த நேரத்தில் தன்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அவர் பதிலளிப்பதற்கு 4 நாள்கள் அவகாசம் வழங்கியது.
சர்ச்சைக்குரிய பேச்சும்; தேர்தல் ஆணையம் நோட்டீஸும்
முன்னதாக, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாக, பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நவம்பர் 4-ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதற்காக, உங்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்த நோட்டீஸில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யுடன் முசாஃபர்நகர் முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பு வைத்துள்ளதாக பேசியதாக, ராகுல் காந்தி மீது பாஜக அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தின்போது, "உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுடன் ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவு அமைப்பு) தொடர்பு வைத்துள்ளது என்று இந்திய உளவுப் பிரிவினர் எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர்' என்று பேசினார். சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சு தொடர்பாகவே, தேர்தல் ஆணையத்திம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தது.
பாஜக மூத்த தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தலைமை ஆணையர் வி.எஸ். சம்பத்தை திங்கள்கிழமை நேரில் சந்தித்து காங்கிரஸின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள 6 பக்க புகார் மனுவில் பாஜக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி ராஜஸ்தானின் சுரு மற்றும் கேர்லியில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசினார். அப்போது, பாஜக தலைவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். இதன்மூலம் பல்வேறு சமூகத்தினரிடம் மதவாதத்தை தூண்டியுள்ளார் எனக் கூறி அதற்கு ஆதரமாக டிவி சேனல்களின் வீடியோ மற்றும் பத்திரிகை செய்திகளை பாஜக தலைவர்கள் சமர்ப்பித்தனர்.
இந்த மனுவில், தேர்தல் விதிகளின்படி, எந்த ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளர்களோ சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் இருதரப்பினர் இடையே பேதங்களை கிளப்பும் வகையில் பேசக்கூடாது எனவும், ஆதாரமில்லாத புகார்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் உள்ள தேர்தல் விதிமுறைகளை கோடிட்டுக் காட்டினர். இவற்றை ராகுல் மீறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT