Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: உச்ச நீதிமன்றம்

கைதாகி உள்ள விசாரணைக் கைதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இது பற்றி பரிசீலிக்க அவசியம் இல்லை என்றும் அது கருத்து தெரிவித்தது.

நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:

லோக் பிராஹிரி என்கிற அமைப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தம் மீது கேள்வி எழுப்பி, மறு ஆய்வு மனுவை ஆட்சேபித்து தனியாக மனு தாக்கல் செய்துள்ளது. திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்ட ரீதியில் செல்லத்தக்கதா என்கிற பிரச்சினை தனியாக பரிசீலிக்கப்படும். ஆட்சேபித்து மத்திய அரசு மனு தாக்கல் செய்யலாம்.அதை தனியாக உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும்.

ஒருவர் போலீஸ் காவலில் இருக்கிறார் என்பதாலோ அல்லது சிறையில் இருக்கிறார் என்பதாலோ அவருக்கு உள்ள வாக்களிக்கும் உரிமை ரத்து ஆகாது என்பதே மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தின் சாரம். எனவே அத்தகையோர் தேர்தலில் போட்டியிடமுடியும் என்று தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘மத்திய அரசின் மறு ஆய்வு மனு, சட்டத்திருத்தம் காரணமாக பலனற்றது’ என்று தொடக்கத்தில் அறிவித்தது உச்சநீதிமன்றம். ஆயினும், தன்னார்வ தொண்டு நிறுவனமானது அதில் நிராகரிப்பு என்கிற வார்த்தை வேண்டும் என்று வலியுறுத்தியதால் மத்திய அரசின் மனுவை நிராகரிப்பதாக உத்தரவில் குறிப்பிட்டது.

ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு

உச்சநீதிமன்றம் ஜூலை 10ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘போலீஸ் காவலிலும் சிறையிலும் இருக்கும் விசாரணைக் கைதி ஒருவர், சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியாது’ என்று தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை செல்லாததாக்கிடும் வகையில் நாடாளுமன்றம் செப்டம்பரில் மசோதா நிறைவேற்றியது. சிறையில் உள்ளவர்கள் போட்டியிடலாம் என்கிற உரிமையை அந்த மசோதா வழங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும் அதை சரிசெய்யக்கூடிய கடமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் குறுகிய விவாதத்துக்குப்பின் 15 நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் ஆகஸ்ட் 27ம் தேதி நிறைவேறியது.

காவலிலோ சிறையிலோ அடைக்கப்பட்டுள்ள ஒருவரின் வாக்குரிமை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதால் அவர் வாக்காளர் என்கிற தகுதி ரத்தாகாது என்கிற அம்சத்தை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 62, உட்பிரிவு 2 ல் சேர்க்க இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த திருத்தம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2013ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x