Published : 19 Apr 2014 11:43 AM
Last Updated : 19 Apr 2014 11:43 AM
காங்கிரஸ் கட்சி தன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அக் கட்சி மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மக்களவை எதிர் கட்சித் தலைவரும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அருண் ஜெய்ட்லி கூறுகையில், “ காங்கிரஸ் மீது இருந்த ஈர்ப்பு தற்போது குறைந்துவிட்டது. எப்போதும் அந்த குடும்பத்தை சுற்றி ஒரு கூட்டம் இருப்பது உண்டு. ஆனால் தற்போது உள்ள தலைவர் அதனை தக்க வைத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸை பொருத்தவரை அந்த கட்சியின் தலைவருக்கு மாற்று என்றால், அடுத்த தலைவர் அந்த கட்சியிலிருந்தே தான் வர வேண்டும் என்ற நிலை உள்ளது.
தற்போது அந்த கட்சி மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. 1977 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இருந்த நிலைக்கு, மீண்டும் அந்த கட்சி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். நடந்து வரும் இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், அது அந்த கட்சியை சேர்ந்த முதலமைச்சர்களின் தவறாக இருக்க முடியாது.
அது முற்றிலும் காங்கிரஸ் மேலிடத்தின் தவறும், அந்த கட்சியை வழி நடத்தி செல்லும் ராகுல் காந்தியின் தவறாகவே அமையும். பிரச்சினை கட்சியின் உள்ளே மட்டும் தான் இருக்கிறது.
அமிர்தசரஸ் எனது பிறப்பிடம் போன்றது. எனது தொகுதியை பொருத்தவரையில் என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது மற்றும் எங்கள் கட்சியின் நிலைபாட்டை மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். எங்கள் நிலையிலிருந்து நாங்கள் பின்வாங்கவே மாட்டோம். இந்த தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடும் அமரிந்தரை, இந்த தொகுதிக்கு உட்பட்டவாரகவே நான் கருதவில்லை. இதுவரை இந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் நிரைவேற்றி உள்ளேன். ஆனால் அமரிந்தர், இந்த மக்களுக்காக என்ன செய்துள்ளார்? என்று அருண் ஜெட்லி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT