Published : 25 Jun 2017 11:01 AM
Last Updated : 25 Jun 2017 11:01 AM
சவுதி அரேபியாவில் அடிமையாக தவிக்கும் கர்நாடக மாநில நர்ஸை மீட்க உதவும்படி, அங்குள்ள இந்திய தூதருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பிரச்சினை களைச் சந்திக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் ஜெசிந்தா மென்டோன்கா. வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு கட்டாயப்படுத்தி அவரை அடிமையாக்கி உள்ளனர். அவரை விடுவிக்க வேண்டு மானால், 24 ஆயிரம் சவுதி ரியால்கள் (சுமார் ரூ.4 லட்சம்) தரவேண்டும் என்று அவரது ‘ஸ்பான்சர்’ நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் தகவல் வெளியானது. அதைப் பார்த்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ஜெசிந்தாவை மீட்க உதவும்படி சவுதியில் உள்ள இந்திய தூதர் அகமது ஜாவீத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சுஷ்மா ட்விட்டரில், ‘‘ஜாவீத்: இந்தப் பெண்ணை மீட்க தயைகூர்ந்து உதவுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், லுவ் கெர் என்பவர் சுஷ்மாவுக்கு அனுப்பியுள்ள ட்விட்டரில், ‘‘என்னுடைய மாற்றுத் திறனாளி மகன் பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாமல் தவிக்கிறார். விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற உதவ வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்த்து வைத்து உதவும்படி வெளியுறவுத் துறையில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுக்கு சுஷ்மா அறிவுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT