கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற படகுப் போட்டி தொடக்க விழாவில் கொல்லம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப் தன்னிடம் அத்துமீறி நடந்ததாகப் பேட்டி கொடுத்தார் மலையாள முன்னணி நடிகை சுவேதா மேனன். இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திலும் முறையிட்டார்.
கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரசாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லம் வடக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையிலும் நேரில் ஆஜராகி தன் தரப்பு வாக்குமூலத்தை தெரிவித்தார் சுவேதா மேனன்.
அதன் அடிப்படையில் கொல்லம் வடக்கு காவல் நிலையத்தில் எம்.பி. பீதாம்பர குரூப் மீது பெண்கள் வன்கொடுமை பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
திடீர் திருப்பம்...
ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென கேரள ஊடகங்களுக்கு சுவேதா மேனன் தரப்பில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதன் சாராம்சம் இது தான்… "நான் என் கணவர், குடும்பத்தினர் மற்றும் நான் மதிக்கும் என் குருஜி உள்ளிட்ட பலரிடமும் ஆலோசனை கேட்டேன். இந்தப் பிரச்சினையை இத்துடன் முடித்துக்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். குற்றச் செயலில் ஈடுபட்ட பீதாம்பர குரூப் மன்னிப்பு கேட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. பிரச்சினையில் ஈடுபட்டவரே உணர்ந்து திருந்தியதால் நான் என் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த மலையாள நடிகர் சங்கத்திற்கும், மகளிர் அமைப்புகளுக்கும் நன்றி".
இந்த மின்னஞ்சலை சுவேதா மேனன் பெங்களூரிலிருந்து அனுப்பியிருந்தார். முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து புகார் கொடுப்பதாக சுவேதா மேனன் தரப்பிலிருந்து தகவல் வந்துகொண்டிருந்தது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்புடன் காத்திருந்தனர் கேரள பத்திரிகையாளர்கள். ஆனால் உம்மன் சாண்டியைச் சந்திக்காமலேயே பெங்களூருக்கு பறந்தார் சுவேதாமேனன். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். களத்தில் கம்யூனிஸ்டுகள்...
சுவேதா மேனனுக்காக புகார் கொடுத்திருந்த கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரசாந்திடம் கேட்டபோது, "கேரள காங்கிரஸ் புள்ளிகள் சுவேதா மேனனை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்திருக்கிறார்கள். சுவேதா மேனன் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் நான் புகார் கொடுத்தேன். சுவேதா மேனன் ஒதுங்கினாலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த விஷயத்தில் தொடர்ந்து போராடும். இதை மக்கள் மன்றத்துக்கும் கொண்டு செல்வோம்" என்றார்.
இதுதொடர்பாக விளக்கம் பெற சுவேதா மேனன் தரப்பை பலமுறை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இனியும் இதுபோன்ற சர்ச்சை உருவாகாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
WRITE A COMMENT